நானுஓயா பொலிஸ் பிரிவின் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நானுஓயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற உந்துருளி ஒன்று பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தானது நேற்று திங்கட்கிழமை (23) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் பலத்த காயமடைந்த பெண் பாதசாரி உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உந்துருளியில் பாதசாரி மோதியவுடன் சந்தேகத்திற்குரிய சாரதி உந்துருளியை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்யவதற்கு விபத்து ஏற்பட்ட இடத்தில் வீதியோரமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியில் உள்ள பதிவுகளை பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.
அத்துடன் விபத்து குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.