புத்தளம் - மதுரங்குலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமீரகம பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி - சமீரகம பகுதியைச் சேர்ந்த முஹம்மது ரஸ்மின் முஹம்மது ரஜாத் (வயது 16) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பதுடன், நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றவிருந்தார்.
சம்பவம் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமையன்று குறித்த மாணவன், தனது மூத்த சகோதரருடன் மீன் பிடிப்பதற்காக அருகில் உள்ள குளம் ஒன்றுக்கு சென்று விட்டு, மாலை மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார் .
இதன்போது, தனது வீட்டில் உள்ள பட்டறையில் வேலை செய்துகொண்டிருந்த தந்தை, அங்கு இரும்புக் கம்பியில் பொருத்தப்பட்டிருந்த போகஸ் லைட்டை சரி செய்யுமாறு வெளியே சென்று வந்த தனது இளைய மகனிடம் கூறியதையடுத்து, குறித்த மாணவன் போகஸ் லைட்டை சரி செய்ய முற்பட்ட போது, மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கிருந்தவர்கள் மாணவனை சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின், மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.