நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஜெயம் ரவி தனது மாமியார் சுஜாதா விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், முதன்முறையாக சுஜாதா விஜயகுமார் தனது மவுனத்தை உடைத்துள்ளார்.

சுஜாதா விஜயகுமார் தனது அறிக்கையில், “கடந்த சில காலமாக என்மீது கொடுமைக்காரி, குடும்பத்தைப் பிரித்தவள், பணப்பேய், சொத்து அபகரித்தவள் என்று பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது இவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த மவுனத்தை உடைக்கிறேன்,” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். 2007-ம் ஆண்டு ‘வீராப்பு’ என்ற திரைப்படத்தை முதன்முதலில் தயாரித்ததாகவும், அதன்பின் சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததாகவும் தெரிவித்தார். 2017-ல் தனது மாப்பிள்ளையான ஜெயம் ரவி, “நீங்கள் திரைப்படங்களையும் தயாரிக்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கியதன் பேரிலேயே மீண்டும் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ‘அடங்க மறு’, ‘பூமி’, ‘சைரன்’ ஆகிய மூன்று படங்களை ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து தயாரித்ததாகவும், இந்தப் படங்களுக்கு அவருக்கு உரிய சம்பளம், ஒப்பந்தம் மற்றும் வரி செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சுஜாதா தெரிவித்தார்.
ஜெயம் ரவி, தனது கடன்களுக்கு சுஜாதா தன்னைப் பொறுப்பேற்க வைத்ததாகக் கூறிய குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். “இந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. ஒரு ரூபாய்க்கு கூட நான் அவரைப் பொறுப்பேற்க வைத்திருந்தால், அதற்கு ஆதாரம் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று சவால் விடுத்துள்ளார்.
மேலும், “ஜெயம் ரவியை எப்போதும் என் மகனாகவே பார்க்கிறேன். அவர் என்னை ‘அம்மா’ என்று அழைப்பார். ஒரு கதாநாயகனாக மட்டுமல்ல, என் மாப்பிள்ளையாக, மகனாகவே அவரை கருதினேன். இன்றும் அவரை மகனாகவே பார்க்கிறேன். அவரது கதாநாயக பிம்பத்தைத் தாழ்த்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்,” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அறிக்கையில், தனது குடும்பத்தைப் பிரித்தவள் என்ற பழியைத் தாங்கும் மனவலிமை தனக்கு இல்லை என்றும், ஊடகங்களிடம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சுஜாதாவின் இந்த அறிக்கை பொதுவெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி தரப்பில் இருந்து மாறி மாறி அறிக்கைகள் வெளியாகி வருவதால், இது மேலும் சிக்கலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இவர்களின் குடும்பப் பிரச்சினை முடிவுக்கு வந்து, அவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று விரும்புவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன