சிவகங்கை மாவட்டம், தமறாக்கி கிராமத்தைச் சேர்ந்த செல்ல சாமியின் மகன் மனோஜ் பிரபு (29), நேற்றிரவு இடையமேலூர் பகுதியில் நடந்த திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
காரில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள், மனோஜின் வாகனத்தை இடித்துத் தள்ளி, அவரை அரிவாளால் வெட்டியதாக உடனிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மனோஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மனோஜிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அபிமன்யு என்பவருக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது. மனோஜ், அபிமன்யுவின் தங்கை புவனேஸ்வரியை காதலித்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி மனோஜைப் பிரிந்தார். இதையடுத்து, புவனேஸ்வரிக்கு மாப்பிளை பார்க்கப்பட்ட நிலையில், மனோஜ் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, மனோஜுக்கும் அபிமன்யுவுக்கும் வாக்குவாதம் முற்றி, ஒரு சமயம் மனோஜ் அபிமன்யுவை கத்தியால் தாக்க முயன்றபோது, அபிமன்யுவின் தந்தை பாண்டியனை வெட்டினார்.
இதில் ஒரு கையை இழந்த பாண்டியனும் மனமுடைந்து சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.இந்தப் பழைய பகை காரணமாக, அபிமன்யுவே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த மனோஜ், கோவில் திருவிழாவிற்காக ஊர் திரும்பியிருந்த நிலையில், இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழு விசாரணைக்குப் பிறகே கொலையின் காரணமும், குற்றவாளிகளும் உறுதியாகத் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.