செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்றைய தினம் (01) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தகப்பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டுத் தொகுதி என நம்பப்படும் எலும்புக்கூடு முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது
பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும், சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது
அதேவேளை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக பணிகளின் போது மேலும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால் , அவை எத்தனை என சரியான எண்ணிக்கை கூறமுடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் மேலும் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



