குஜராத்தைச் சேர்ந்த 34 வயது நபர், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், மணப்பெண்ணின் வயது 32 எனக் கூறி, போலி பாஸ்போர்ட் மூலம் ஏமாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மருத்துவ பரிசோதனையில், மனைவியின் வயது 42-45 ஆக இருக்கலாம் எனத் தெரியவந்தது, இயற்கையாக குழந்தை பெற முடியாத நிலையும் உறுதியானது.

இதனால், கோபமடைந்த கணவர், மனைவி, மாமனார் உள்ளிட்ட எட்டு பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமணத்திற்கு முன், மணப்பெண்ணின் கல்வி மற்றும் வயது சான்றிதழ்களை மாப்பிள்ளை வீட்டார் கேட்டபோதும், அசல் ஆவணங்கள் வழங்கப்படவில்லை. திருமணத்தின்போதும், பாஸ்போர்ட் மற்றும் பள்ளி சான்றிதழ்களின் நகல்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
திருமணப் பதிவு மற்றும் வங்கிப் பணிகளுக்காக அசல் ஆவணங்கள் கோரப்பட்டபோதும், அவை வழங்கப்படவில்லை. இதனால், மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்த மாப்பிள்ளை, காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். காவல்துறையினர், மணப்பெண் தரப்பு மீது விசாரணை தொடங்கியுள்ளனர்.
மனைவி தரப்பு, மோசடியை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தன்னை விட 10 வயது மூத்த பெண்ணுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக வாழ்ந்ததாக மாப்பிள்ளை அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதேபோன்று, தமிழ்நாட்டில் தாராபுரத்தைச் சேர்ந்த சந்தியா (35) என்ற பெண், தனது வயதை 30 எனக் கூறி, 40 வயதுக்கு மேற்பட்டவர்களை ஏமாற்றியதாக கடந்த ஆண்டு பரபரப்பு ஏற்பட்டது.
அவரை ‘கல்யாண ராணி’ என அழைத்தனர். இதேபோல், இந்த குஜராத் மணப்பெண்ணையும் சமூக வலைதளங்களில் ‘குஜராத் கல்யாண ராணி’ என பலர் குறிப்பிடுகின்றனர்.
இந்த வழக்கு, ஆவணங்களின் அசல் நகல்களை சரிபார்க்காமல் திருமணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது. காவல்துறை விசாரணை முடிவில், மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.