திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த மணிகண்டன் (41), இந்திய அளவில் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பிரபல உடற்பயிற்சி வீரர்.
தனது அக்காள் கணவரைப் போல ஜிம் மாஸ்டராக வேண்டும் என்ற கனவுடன் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு, மிஸ்டர் இந்தியா மற்றும் மிஸ்டர் சவுத் இந்தியா பட்டங்களை பலமுறை வென்றார்.

மீஞ்சூரில் எம்கேஎம் உடற்பயிற்சி மையத்தை நடத்தி, இளைஞர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களை போட்டிகளுக்கு தயார்படுத்தி வந்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கமான incrediblemani25 மூலம் உடற்பயிற்சி குறிப்புகளை பகிர்ந்து ரசிகர்களை ஊக்கப்படுத்தினார்.
ஆனால், கடந்த ஜூலை 2, 2025 அன்று, கடுமையான வயிற்று வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் மணிகண்டன் உயிரிழந்தார்.
அவரது சகோதரி, அளவுக்கு மீறிய ஊக்க மருந்து (ஸ்டெராய்டு) பயன்பாடே மரணத்திற்கு காரணம் எனக் கூறினார். முன்னதாக, நண்பர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊக்க மருந்து எடுத்த மணிகண்டன், ஒரு போட்டியின்போது மயங்கி விழுந்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.
இந்த ஸ்டெராய்டு பயன்பாடு உடல் உபாதைகளை ஏற்படுத்தியதாகவும், பொறாமையால் சில நண்பர்கள் அதிகளவு ஊக்க மருந்து கொடுத்து சூழ்ச்சி செய்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் உடற்பயிற்சி துறையில் பெரும் அதிர்ச்சியையும், ஊக்க மருந்து பயன்பாடு குறித்த விவாதத்தையும் தூண்டியுள்ளது.