கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தபால்மேடு பகுதியில் உள்ள குண்டியால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரனின் மனைவி அம்பிகா (40), காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அம்பிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த அவரது மகள், பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன.

விசாரணையில், அம்பிகாவின் உடல் கிடந்த இடத்திலிருந்து 30 அடி தூரத்தில் அவரது உடைந்த செல்போன் கண்டெடுக்கப்பட்டது. செல்போனில் கடைசியாக பேசிய நபரை ஆய்வு செய்தபோது, திருப்பதி என்பவரின் மகன் ஏழுமலை (29) உடன் அம்பிகா பேசியது தெரியவந்தது.
இதையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஏழுமலையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்பிகாவின் மரணத்திற்கு பின்னால் தகாத உறவு, மது போதை மற்றும் கொடூரமான தாக்குதல் இருப்பது அம்பலமானது.
ஏழுமலை, 17 வயது சிறுவன் ராகுல் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோருடன் ஜூலை 25 அன்று குண்டியால்நத்தம் காட்டுப்பகுதியில் மது அருந்தியதாக ஒப்புக்கொண்டார். மது போதையில், ஏழுமலை அம்பிகாவை செல்போனில் தொடர்பு கொண்டு காட்டுப்பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அம்பிகாவும், “எனக்கு மது வாங்கி வாருங்கள்,” என்று கூறி அங்கு சென்றார். நால்வரும் காட்டில் அமர்ந்து மது அருந்திய பின்னர், உல்லாசமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.அம்பிகா, புறப்படும்போது ஏழுமலையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், “என்னிடம் பணம் இல்லை, நீ கிளம்பு,” என்று ஏழுமலை கூறியதால் வாக்குவாதம் முற்றியது.
கோபத்தில், அம்பிகா ஏழுமலையின் செல்போனை பிடுங்கி, “பணம் கொடுத்துவிட்டு போனை எடு,” என்று கூறியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த ஏழுமலை, அம்பிகாவை கடுமையாக தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
பயந்துபோன ஏழுமலை, ராகுல் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய மூவரும் சடலத்தை அப்படியே விட்டுவிட்டு தலைமறைவாகினர்.இந்த வழக்கில், ஏழுமலை, ராகுல் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அம்பிகாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம், குண்டியால்நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மது போதை, தகாத உறவு மற்றும் வன்முறை ஆகியவை இந்த துயர சம்பவத்திற்கு வழிவகுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.