கர்ப்பிணி மனைவி மருத்துவமனைக்கு செல்வதாக பாசாங்கு செய்து, ஐஸ் போதைப்பொருள் பொதிகளை பல்வேறு இடங்களில் வைத்து விற்பனை செய்த கணவன்-மனைவி ஜோடி ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் ஹரேந்திர கலுகம்பிட்டிய தெரிவித்தார்.
கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று ஈஸி கேஷ் முறையில் பணம் பெற்று ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்த இந்த ஜோடி குறித்து பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், நாவலப்பிட்டி தொலஸ்பாக மார்க்கத்தில் உள்ள பழைய ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பு அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஐஸ் போதைப்பொருள் பொதிகளை வைத்து விற்பனை செய்ய முயன்றபோது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை சோதனையிட்டபோது, 52 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில், சில பொதிகள் சந்தேகநபரான பெண்ணின் உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு பொதியின் விலை சுமார் 7,000 ரூபாவாக இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
