உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமையவே அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேநேரம் பாடசாலை இடம்பெறும் நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் நீக்கிக்கொள்ளாவிட்டால் பணி பகிஷகரிப்புக்கு செல்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அனுராதபுர மாவட்ட மாநாடு புதன்கிழமை (29) அநுராதபும் கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அதன் தலைவர் பிரியந்த பெர்ணாந்து தெரிவிக்கையில்,கடந்த கால அரசாங்கங்கள் கல்வி மறுசீரமைப்பு திட்டமாக சில திருத்தங்களை கொண்டுவந்திருந்தது. அந்த திருத்தங்களையே தற்போது இந்த அரசாங்கம் கொண்டுவந்திருக்கிறது.ஆசிரியர் சங்கங்கள் எவ்வாறான எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை கொண்டுவந்தே ஆகுவோம் என்றே அரசாங்கம் தெரிவித்து வருகிறது. அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை இருக்கிறது என்பதற்காக அரசாங்கத்துக்கு நினைத்த பிரகாரம் செயற்பட முடியாது. மக்கள் அதற்காக ஆணை வழங்கவில்லை.அரசாங்கம் இந்த புதிய கல்வி மறுசீரமைப்பை கொண்டுவருவதற்கு உள்நோக்கம் ஒன்று இருக்கிறது. அதாவது, அடுத்த வருடம் உலக வங்கி அரசாங்கத்துக்கு 200 மில்லியன் டொலர் வழங்க இருக்கிறது. அதனை பெற்றுக்கொள்ள இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைதான், ஆசியரியர்களின் தொகையை குறைப்பதாகும். அதன் அடிப்படையிலே கடந்த வருடத்தில் வடமேல் மாகாணத்தில் 8 பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன.கடந்த காலங்களில் நாட்டை ஆட்சி செய்த பெரும் தனவந்தர்களையுடை அரசாங்கங்கள் செய்யாத விடயங்களையே இந்த அரசாங்கம் செயற்படுத்த முயற்சிக்கிறது. 1506 பாடசாலைகளுக்கு இயற்கை மரணத்தை ஏற்படுத்துவதற்கான முறையை நிர்மாணித்திருக்கிறது என்றார்.அங்கு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், அரசாங்கம் பாடசாலை இடம்பெறும் நேரத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதாவது, காலை 7,30 முதல் 2 மணிவரை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் பாடசாலை இடம்பெறும் நேரம், விஞ்ஞான ரீதியில், மாணவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமான சக்தியின் அடிப்படையிலே தீர்மானிக்கப்பட்டிருக்கிறுது.அதனால் பாடசாாலை இடம்பெறும் நேரத்தை 2மணி வரை நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வு என்ன என கேட்கிறோம். எந்தவிதமான ஆய்வும் மேற்கொள்ளாமலே இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது.அதனால் பாடசாலை அடுத்த தவணைக்கு விடுமுறை வழங்குவதற்கு முன்னர். அரங்கம் தனது இந்த நிலைப்பாட்டை நீக்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், டிசம்பர் மாதம் பாடசாலை ஆரம்பிக்கும்போது ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு செல்வோம் இதுதொடர்பில் அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கிறோம் என்றார்.
