சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் வீடுகள் சேதமடைந்த பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட ஒருவர், சேதமடைந்த வீடொன்றினுள் சென்று, அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவரின் வங்கி அட்டையைத் திருடி, அதனைப் பயன்படுத்தி பொருட்களைக் கொள்வனவு செய்தமைக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடதும்பர, கங்கொட பகுதியில் இடிந்து விழுந்த வீடொன்றினுள் சென்ற குறித்த நபர், அவ்வீட்டில் இருந்து திருடிய வங்கி அட்டையைப் பயன்படுத்தி, சுமார் 6000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கைதான நபர் உடதும்பர, கங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் வெலிக்கடை சிறைச்சாலையின் ஊழியர் என்பதும் தெரியவந்துள்ளது.
"டித்வா" சூறாவளி காரணமாக கங்கொட பகுதியில் பல வீடுகள் மண்சரிவுகளால் சேதமடைந்தன. அங்கிருந்த பலர் காணாமல் போயுள்ளனர்.
வங்கி அட்டையைத் திருடிய நபர் மண்சரிவு அபாயம் காரணமாக வீட்டை விட்டுச் சென்றவர்களது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் எனவும் அந்த நபரின் வீடும் மண்சரிவில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, வீட்டு உரிமையாளரின் சகோதரி, வீடு இருந்த இடத்திற்குச் சென்று நிலைமையை பார்வையிட்டபோது, அப்பகுதியில் ஓரிடத்தில் அவரது மூத்த சகோதரரின் பணப்பையை கண்டெடுத்துள்ளார். அந்த பணப்பையினுள் வைக்கப்பட்டிருந்த வங்கி அட்டை காணாமல் போயுள்ளதையும் அவதானித்துள்ளார்.
அதனையடுத்து, சகோதரரின் வங்கி அட்டை காணாமல்போனதாகவும், சகோதரர் உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு அந்த அட்டை பயன்படுத்தப்பட்டு, 6,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள விடயம் சகோதரிக்கு தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன் பின்னர், அந்த சகோதரி வங்கிக்கு சென்று, வங்கி அட்டையை செயலிழக்கச் செய்யும்படி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து வங்கி அட்டை திருடப்பட்டமை தொடர்பாக உடதும்பர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்நிலையில், விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தபோதே சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
