வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டுள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற நிலைமையும் காணப்படுகின்றது. இதன் காரணமாக தற்பொழுது நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை இரவு முதல் (18.12.2025) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் கிழக்கு ஊவா, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருப்பதனாலும் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இன்று முதல்(17.12.2025) எதிர்வரும் 19.12.2025 ஆம் திகதி வரை சற்று கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் மழை தொடர்ந்து கிடைத்து வருவதாலும் கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 19ம் திகதி வரை மழை கிடைக்கும் என்பதனாலும் கிழக்கு மாகாணத்தில் குளங்களுக்கு நீரை கொண்டு வருகின்ற நீரேந்துப் பிரதேசங்களுக்கும் மழை தொடரும் எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.கிழக்கு மாகாண குளங்களுக்கு அதிகளவான நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற மிதமான மற்றும் கனமான மழை காரணமாக வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகின்றது.எனினும் நாளை (18.12.2025) இரவு முதல் வடக்கு மாகாணத்திற்கு மழை குறைவடையும் வாய்ப்புள்ளது. அதேவேளை கடந்த சில நாட்களாக நிலவிய குளிர் மீண்டும் நாளை மறு தினம் முதல் (19.12.2025) அதிகரிக்கும் என்பதோடு இந்த குளிரான வானிலை 26 ஆம் திகதி வரைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்
