கொல்கத்தாவின் அமைதியான ஒரு பகுதியில், 1983-ஆம் ஆண்டு, ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய சீதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 1985-ஆம் ஆண்டு அர்ஜுன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. மூவரும் சிறப்பான குடும்பமாக, கருத்து வேறுபாடுகள் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சீதாவின் நடவடிக்கைகளில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், 1997-ஆம் ஆண்டு, புதர் மண்டிய காட்டுப்பகுதியில் சீதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது அர்ஜுனுக்கு வெறும் 12 வயதுதான். எந்தச் சம்பந்தமும் இல்லாத இடத்தில் இப்படி ஒரு கொலை நடந்தது கொல்கத்தாவே அதிர்ந்தது. போலீசார் பல கோணங்களில் விசாரித்தனர். சீதா பணியாற்றிய பனியன் நிறுவனத்திலும் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர். 12 வயதில் தாயை இழந்த அர்ஜுன், நாள்தோறும் உணவு உண்ணாமல், தூக்கம் இல்லாமல் தவித்தான். போலீசார் தாண்டி, தானே தகவல்களைச் சேகரித்து விசாரித்தான். உறவினர்கள், “நடந்தது நடந்துவிட்டது. இதை நினைத்து நேரத்தை வீணாக்காதே. படி, எதிர்காலத்தைக் கவனி” என்று அறிவுறுத்தினர். சீதாவின் தந்தை (அர்ஜுனின் தாத்தா) மற்றும் சித்தி (சீதாவின் தங்கை) ரேகா, அதீத அக்கறையுடன் அர்ஜுனை வளர்த்தனர். “உனக்கு இந்த வயதில் இது ஆபத்து. உயிருக்கே கூட ஆபத்து வரலாம். படிப்பில் கவனம் செலுத்து” என்று ரேகா கண்டித்தார். ஆனால் அர்ஜுன் மனதில் ஒரே எண்ணம்: “தாயின் மரணத்துக்கு காரணமானவரை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன்” என்று கங்கணம் கட்டிக்கொண்டான். நாட்கள் உருண்டன. அர்ஜுனுக்கு 19 வயது ஆனது. வீட்டின் வறுமை காரணமாக, தாய் பணியாற்றிய அதே பனியன் நிறுவனத்தில் உரிமையாளரின் உதவியால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. வேலையுடன், அவ்வப்போது தாய்க்கு தெரிந்தவர்களிடம் இலைமறை காய்மறையாக விசாரிப்பது, தாயின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது வாடிக்கையாக இருந்தது. ஒருநாள், நண்பர்களுடன் ஒரு மதுபான விடுதிக்குச் சென்ற அர்ஜுன், ஒரு காலி மது பாட்டிலுக்குள் சிகரெட் துண்டு இருப்பதைக் கவனித்தான். உடனே நினைவுக்கு வந்தது: தாயின் சடலத்துக்கு 10 அடி தொலைவில் கிடந்த மது பாட்டிலுக்குள் சிகரெட் துண்டு இருந்தது! போலீசார் அதை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினர், ஆனால் பயனில்லை. நண்பர்களிடம், “என் தாய் இறந்த இடத்துக்கருகேயும் இதே மாதிரி சிகரெட் துண்டு கொண்ட பாட்டில் இருந்தது. கண்டிப்பாக இது தொடர்புடையது” என்றான். நண்பர்கள், “மது குடிப்பவர்கள் பலர் இப்படிச் செய்வது வழக்கம். ஐந்து ஆண்டுகளாகியும் போலீசுக்கே தெரியவில்லை. மறந்துவிடு” என்று அறிவுறுத்தினர். ஆனால் அர்ஜுன் கோபமடைந்து, பாரில் உள்ள பல காலி பாட்டில்களைச் சரிபார்த்தான். பின்னால் உள்ள தகரக் கொட்டகையில் குவியல் குவியலாக பாட்டில்கள். நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தபோது, மொத்தம் 5 பாட்டில்களில் சிகரெட் துண்டு இருந்தது. அதில் அதிர்ச்சி: அந்த 5 பாட்டில்களும் ஒரே பிராண்ட் பிராந்தி! சிகரெட் துண்டுகளும் ஒரே பிராண்ட்! தாயின் சடலத்தருகே கிடந்ததும் அதே பிராண்ட்! “யாரோ ஒரே நபர்தான் இதைச் செய்கிறார். அவர் அடிக்கடி இந்த பாருக்கு வருகிறார்” என்று உறுதியானது. பாட்டில்களை ஒவ்வொரு மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது திங்கட்கிழமை அப்புறப்படுத்துவதால், இரு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம். அதில் 5 பாட்டில்கள் என்றால், வாரத்துக்கு 2-3 முறை அந்த நபர் வருகிறார் என்பது தெளிவு. அர்ஜுனுக்கு உள்ளூர உறுத்தல்: “இன்று மது குடிக்க மாட்டேன் என்று நினைத்தேன். நண்பர்கள் வற்புறுத்தி அழைத்துவந்தனர். இந்தப் பாட்டிலைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், பார்த்தேன். என் தாய் எனக்கு ஏதோ சொல்ல நினைக்கிறார்” என்று நம்பினான். சிசிடிவி இல்லாத காலம் என்பதால், ஒரு வாரம் பாரை கண்காணிக்க முடிவு. வேலைக்கு விடுப்பு கடினம் என்பதால், பாரில் வேலை செய்யும் ஒரு பையனுக்கு பணம் கொடுத்து, “இந்த பிராண்ட் வாங்கி, சிகரெட் துண்டு போடுபவரைத் தகவல் சொல்லு” என்றான். ஒரு வாரம் கழித்தும் தகவல் இல்லை. சென்று கேட்டபோது, “கவனித்தேன், யாரும் இல்லை” என்றான். சந்தேகமடைந்த அர்ஜுன், தகர கொட்டகையைச் சரிபார்த்து 2 பாட்டில்களில் சிகரெட் துண்டு கண்டான். அந்தப் பையன் அஜாக்கிரதையால் தவறவிட்டான். அடுத்த வாரம், அர்ஜுனும் நண்பன் ஒருவனும் விடுப்பு எடுத்து கண்காணித்தனர். திங்கள், செவ்வாய், புதன் – பயனில்லை. 2005 அக்டோபர் 13, வியாழக்கிழமை – அந்த நபர் வந்தான்! மது குடித்து, சிகரெட் புகைத்து, துண்டை பாட்டிலுக்குள் போட்டு மூடினான். அர்ஜுனும் நண்பனும் அவரை எதேர்ச்சையாக சந்தித்துப் பேசுவது போல பேசினார். அவனை தாக்காமல், பின்தொடராமல், நட்பாகப் பழக முடிவு. “இன்று என் நண்பனுக்கு பிறந்தநாள். மது கூடுதலாக வாங்கிவிட்டோம். திடீரென ஒருத்தன் வரவில்லை என்று கூறிவிட்டான்.. நீங்க கம்பெனி குடுங்க.." என்று அழைத்தனர். போதையில் இருந்த ராஜேஷ் சுக்லா ஒப்புக்கொண்டான். ஆம், அந்த நபரின் பெயர் ராஜேஷ் சுக்லா. ஆரம்பத்தில் தாயின் மரணம் பற்றி எதுவும் கேட்கவில்லை. பலமுறை சந்தித்து நட்பு பாராட்டினர். ராஜேஷ், “ஒவ்வொரு வாரமும் வியாழன், ஞாயிறு இங்கு வருவேன்” என்றான். இரண்டாவது சந்திப்பில், “நீங்கள் என்ன வேலை?” என்று கேட்டபோது, பனியன் நிறுவனத்தில் வேலை என்றனர். ராஜேஷ், “நானும் சில ஆண்டுகளுக்கு முன் அங்குதான் வேலை பார்த்தேன்” என்றான். அர்ஜுனுக்கு அதிர்ச்சி! கோபம் தலைக்கேறியது, ஆனால் நண்பன் ஆசுவாசப்படுத்தினான். அடுத்த இரு மாதங்கள் நட்பாகப் பழகி, மது அருந்தி, கொஞ்சம் கொஞ்சமாக விவரங்களை வாங்கினர். ராஜேஷிடம் திருமண வாழ்க்கை பற்றிக் கேட்டபோது, “ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவள் திடீர் இறந்துவிட்டாள். அதனால் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்கிறேன்” என்றான். “யார் அந்தப் பெண்?” என்று கேட்டபோது, சீதாதான்! ஆம், அர்ஜுனின் அம்மா சீதா தான்! “அவளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனாலும் நாங்கள் காதலித்தோம். உல்லாசமாக இருந்தோம். ஒருநாள் திருமணம் செய்துகொள் என்றேன். மறுத்தாள். கோபத்தில் அடித்துவிட்டேன். மயங்கி இறந்துவிட்டாள். தப்பி ஓடிவிட்டேன். எங்களின் காதல் பற்றி வேறு யாருக்கும் தெரியாது. என் கையாலேயே கொன்றுவிட்டேன்” என்று மது போதையில் அழுது ஒப்புக்கொண்டான். அர்ஜுன் அதிர்ச்சியடைந்தான். தன்னுடைய தாய் பற்றி அறியாத கருப்பு பக்கத்தை அறிந்து அதிர்சியானான். அதனால், ராஜேஷை தாக்கவோ, அடிக்கவோ இல்லை. இரண்டு மாத பழக்கம் ராஜேஷ் மீது ஒரு நிஜ நட்பை உருவாக்கியது. ஆனாலும், என் தாயை கொலை செய்தவன் இவன். அனைத்து விவரங்களையும் போலீசாரிடம் கொடுத்தான். விசாரணையில் தான் செய்த தவறை ராஜேஷ் ஒப்புக்கொண்டான். அர்ஜுனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான். நீதிமன்றம், ராஜேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2028-ஆம் ஆண்டு அவன் விடுதலை ஆவான். இந்தச் சுவாரசியமான சம்பவம் கொல்கத்தாவில் நடந்தது. ஒரு மகனின் அசைக்க முடியாத உறுதியும், சிறு தடயத்தின் மூலமும் எப்படி நீதி கிடைத்தது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
