தனியார் துறையின் ஊழியர்கள் ஊழியர் சேமலாபநிதியை (இ. பி. எவ்.) ஒரே தவணையில் பெறுவதற்கு பதிலாக அந்த நிதியை ஓய்வூதியம் வழங்கும் முறைமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதி தொழில் அமைச்சர் மகிந்த ஜெயசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புக்காகவே சேமலாப நிதியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தனியார் துறை ஊழியர்கள் சேமலாப நிதியை ஒரே தவணையில் பெறும்போது அவர்களின் சமூகப் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகிறது.
இதனால் தனியார் துறை ஊழியர்களும் ஓய்வு பெற்றதும் காலம் முழுவதும் ஓய்வூதியம் பெறும் வகையில் ஓய்வூதியத் திட்டம் போன்ற ஒரு முறைமையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றார். இதேவேளை இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காகத் தொழிலாளர் திணைக்களத்தின் இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஊழியர்கள் தற்போது தொழிலாளர் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாக நேரடியாக முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
