வலுவிழந்து அரேபிக் கடலை நோக்கி நகரும் தாழமுக்கம் மழை நிகழ்வானது மேற்கு, தென்மேற்கு திசையில் இலங்கையின் மத்திய நிலப்பரப்பினூடாக ஒரு கட்டமைப்பை இழந்த மெலிந்த வளிமண்டல சுழற்சியாக மேற்கே அரபிக்கடல் நோக்கி மிக மெதுவாக நகர்கிறது. இது தற்போது இலங்கையின் மத்திய நிலப்பரப்பில் நகர்வதால் மிதமான வெப்ப நீராவியை சுமந்துவரும் கிழக்கு காற்றலையை வடக்கு மாகாணத்தினூடாக ஈர்க்கிறது. இதன் விளைவாக யாழ்ப்பாணம், வன்னி உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே காற்றுக்குவிதல் உண்டாகி, பரவலாக விட்டுவிட்டு மழைப்பொழிவு கிடைத்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் சுழற்சியானது மேலும் வலுவிழந்து, ஒரு தளம்பல் நிலையாக இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் விலகிச் செல்லுமென கணிக்கப்படுவதால், வடக்கு கிழக்கில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை திங்கட்கிழமை 26ம் திகதி காலையுடன் சீரடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
