கதிர்காமம் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கதிர்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பயனாளி ஒருவருக்குச் சொந்தமான அஸ்வெசும கொடுப்பனவு நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கதிர்காமம் பிரதேச செயலாளர் பிரகீத் குலதிலக்க, பிரதேச செயலக அதிகாரி ஒருவருக்கு எதிராக கதிர்காமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தமக்குச் சேர வேண்டிய கொடுப்பனவை அதிகாரி ஒருவர் சட்டவிரோதமான முறையில் பெற்றுள்ளதாகப் பயனாளி ஒருவர் தொலைபேசி ஊடாக பிரதேச செயலாளருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 2023 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அலவ்வ பகுதியிலுள்ள ஒரு தனியார் வங்கி கிளையில் பயனாளியின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்தது. பயனாளியின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி, அவருக்குத் தெரியாமலேயே இந்தக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் உறுதியாகியுள்ளது. குறித்த வங்கிக் கணக்கை தற்காலிகமாக முடக்குமாறு பிரதேச செயலாளர் வங்கி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது ஒரு திட்டமிட்ட நிதி மோசடி எனக் கருதும் பிரதேச செயலாளர், இது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணை நடத்துமாறு பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளார். கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
