வாகனங்களை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வரும் நிலையில், இது தொடர்பில் வாகன உரிமையாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான காரை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டுச் சம்பவம் கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில் நேற்று (28) அதிகாலை சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் 6.235 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குறித்த கார் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யட்டகல, ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபர் எல்பிட்டிய மற்றும் பத்தேகம பொலிஸ் பிரிவுகளில் 2 முச்சக்கரவண்டிகளைத் திருடியமை மற்றும் ஹோமாகம பொலிஸ் பிரிவில் 2 மோட்டார் சைக்கிள்களைத் திருடிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் நேற்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
