நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து - மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி - அத்துமீறும் கனரக வாகனங்கள்.
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த லொறி ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் லொறியில் சாரதி மயிரிழையில் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக குறித்த வீதியில் அதிகமான வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது,
பெரும்பாலான விபத்து அதிக சுமைகளுடன் செங்குத்தான இவ்வீதியில் அதிக வேகமாக செல்லும் வாகனங்களினால் ஏற்பட்டு வருகிறது அத்துடன், பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனயீனத்தினால் ஏற்படுகிறது.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியானது 3.2 கிலோமீட்டர் தூரம் கொண்டது இதில் செங்குத்தான அதிக சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் இருபுறமும் ஏராளமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது .
இவ்வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு முழுமையாக தடை விதிக்கபட்டுள்ளது இருந்தும் தற்போது தொடர்ந்து இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் கனரக வாகனங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் அத்துமீறி செல்லும் நிலை தொடர்ந்து இருக்கிறது இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது .
எனவே இனி வரும் காலங்களில் குறித்த வீதியினை பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
