பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் சற்று முன் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

 

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வு வியாழக்கிழமை 12 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.


இச்செயற்திட்டத்திற்காக 4,001 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2033 வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 200 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


இதன் முதற்கட்டமாக, 2025/26 கல்வியாண்டிற்காக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 9 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இணைந்துள்ளனர்.


மாணவர்கள் உலகத் தரவரிசையில் (QS, THE அல்லது ARWU) முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே பயில வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும்.


தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்காக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் ரூபாய் வீதம், நான்கு வருட முழுமையான பட்டப்படிப்புக் காலத்திற்காக 80 மில்லியன் ரூபாய் (ரூ. 80,000,000) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,


கல்வி அமைச்சு என்ற ரீதியில் இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய நாள். எமது கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதியின் முதற்கட்டமாகவே உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற 32 மாணவர்களுக்கு இந்த வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை உருவாக்குவது இலகுவானதாக இருக்கவில்லை; மாணவர் தெரிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் பல்கலைக்கழகங்களின் தரம் போன்ற விடயங்கள் குறித்து நாம் மிக விரிவாக ஆராய்ந்தோம்.


இது ஒரு சாதாரண புலமைப்பரிசில் திட்டம் அல்ல, இது எமது நாட்டின் எதிர்கால நோக்கை வரையறுக்கும் ஒரு செயற்திட்டமாகும். இதன் மூலம் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.


எனவே, இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்படுபவர்களிடம் கல்விசார் திறமைகளுக்கு மேலதிகமாகத் தலைமைத்துவப் பண்புகள், ஆளுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் போன்ற குணாதிசயங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும்.


நமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் நாட்டில் சிறந்த பிரஜைகள் உருவாக வேண்டும். சிங்கப்பூர், சீனா, மலேசியா போன்ற நாடுகள் மனிதவள அபிவிருத்தியில் முதலீடு செய்து முன்னோக்கிச் சென்றமையினாலேயே இன்று உலக அரங்கில் முன்னிலையில் திகழ்கின்றன. அதே பாதையை நாமும் பின்பற்ற வேண்டும்.


நீங்கள் வெறும் பட்டதாரிகளாக மாத்திரம் திரும்பி வராது, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றியமைக்கும் செயற்பாட்டில் ஓர் அங்கமாகத் திகழ வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். இது ஒரு நீண்டகால முதலீடாகும். உங்களின் ஆளுமை மூலம் மற்றுமொரு மாணவருக்கு உதவுதல், மற்றவர்களை வழிநடத்துதல் போன்ற தலைமைத்துவப் பண்புகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.


காலநிலை மாற்றங்கள், கலாசார வேறுபாடுகள், உறவினர்களைப் பிரிந்திருத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், தனது பயணத்தைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய அனைத்துச் சவால்களையும் உங்களது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


கடினமான அனுபவங்களையும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய கலாசாரங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை நமது நாட்டை மீளக்கட்டியெழுப்பப் பயன்படுத்தும் புதிய சிந்தனையாளர்களாக உருவெடுங்கள்.


இயன்றவரை புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தொடர்பாடல் திறன், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், குழுக்களை வழிநடத்துதல் மற்றும் பிறரைப் புரிந்துகொள்ளுதல் போன்ற ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.


அதன் மூலமே நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அந்தப் பாரிய தாக்கத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள முடியும். உங்களை நாம் ஒருபோதும் தனிமைப்படுத்தி விடமாட்டோம். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் உங்களுக்காகத் தலையிட நாம் தயாராக இருக்கிறோம். தூதரகங்கள் ஊடாக அவசியமான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுக்கவும் நாம் உறுதுணையாக இருப்போம்.


நாட்டை ஒரு சமூக மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின், அது நம் அனைவரினதும் கூட்டுத் தலையீட்டின் மூலமாகவும், ஒருவரையொருவர் பாதுகாப்பதன் மூலமுமே சாத்தியமாகும். இலங்கையை மாத்திரமன்றி, முழு உலகையுமே மக்கள் நலன்சார்ந்த பாதையில் வழிநடத்தக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ மற்றும் அமைச்சின் அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post