ஜார்க்கண்டில் மகனின் நோயைக் குணப்படுத்துவதற்காக தனது 13 வயது மகளைப் பலியிட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள குசும்பா கிராமத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
கிராம மக்கள் ராம நவமியைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது சிறுமி காணாமல் போனதாகவும், மறுநாள் காலை பள்ளிக்கு அருகிலுள்ள மூங்கில் காட்டில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, சிறுமியின் சிறுமியின் 35 வயது தாயின் அளித்த புகாரின் பேரில், விசாரணைகள் ஆரம்பமானது. தாயின் வாக்குமூலத்தில் இருந்த முரண்பாடுகளை வைத்து பொலிஸார் உண்மையை கண்டறிந்துள்ளனர்.
குறித்த பெண்ணின் மகனுக்கு நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் குறைபாட்டைத் தீர்க்கவும், குடும்பப் பிரச்சினைகளை முடிக்கவும் ஒரு கன்னிப் பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என்று அந்த ஊரை சேர்ந்த பெண் சாமியார் கூறியுள்ளார்.கணவனை இழந்த பெண், வேறு ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். தனது காதலனுடன் சேர்ந்து மகளை நரபலி கொடுக்க திட்டம் தீட்டியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.
துர்காஷ்டமி அன்று நரபலி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பூஜை நடப்பதாகக் கூறி சிறுமியை சாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். நள்ளிரவில் சிறுமியை அருகிலுள்ள மூங்கில் காட்டிற்கு அழைத்துச் சென்று நரபலி கொடுத்துள்ளனர்.
இது ஒரு பாலியல் வன்கொடுமை கொலை போலக் காட்ட முயற்சி செய்து சிறுமியின் தாய் பக்கத்து வீட்டுக்காரர் மீது பொய்ப் புகார் அளித்து நாடகமாடியுள்ளார்.
