2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தரம் 2 முதல் தரம் 11 வரையான மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சுற்றுநிருப அறிவுறுத்தல்களை வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 2025 செப்டம்பர் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 27/2025 ஆம் இலக்க சுற்றுநிருபத்தை நடைமுறைப்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையிலும், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களைப் பேணும் வகையிலும் புதிய வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இதன்படி, வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் பேணுதல்.
பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை நடைமுறையை முறைப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த புதிய சுற்றுநிருப அறிவுறுத்தல்கள் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
