இலங்கையில் சீனி நுகர்வு மிகவும் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தனிநபரின் வருடாந்த சீனி நுகர்வு வீதமானது, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள அளவை விடவும் கணிசமாக அதிகரித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு தனிநபர் வருடத்திற்கு 22 முதல் 24 கிலோகிராம் சீனியை மட்டுமே நுகர வேண்டும் என உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இலங்கையில் ஒரு தனிநபரின் வருடாந்த சீனி நுகர்வு 32 முதல் 34 கிலோகிராம் என்ற மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் வருடாந்த சீனி நுகர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஒட்டுமொத்த வருடாந்த சீனி நுகர்வு சுமார் 6.5 லட்சம் மெட்ரிக் தொன்களாக காணப்படுகின்றது.
இதில் உள்நாட்டு சீனி உற்பத்தி வெறும் 56,000 மெட்ரிக் தொன்களாக மட்டுமே காணப்படுகிறது.
இது மொத்த நுகர்வில் வெறும் 8% முதல் 10% வரை மட்டுமேயாகும் என்பது குறிப்பிடத்தக்குது. நாட்டின் சீனி தேவையை இறக்குமதி மூலம் ஈடுசெய்வதற்காக, வருடாந்தம் சுமார் 110 பில்லியன் ரூபாய் வரையிலான பெருந்தொகை செலவிடப்படுகிறது.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டு சீனி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு புதியதொரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
