அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து, கடந்த மே 23ஆம் திகதி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குறித்த சங்கம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
முதற்கட்ட கணக்கெடுப்பின் போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்ற வெளித்தரப்பினரைப் பயன்படுத்தியதால் தவறான தரவுகள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன.
முதற்கட்ட கணக்கெடுப்பின் போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்ற வெளித்தரப்பினரைப் பயன்படுத்தியதால் தவறான தரவுகள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதனால் தகுதியற்றவர்கள் உள்வாங்கப்பட்டு, தகுதியான பலர் விடுபட்டுள்ளனர்.
மேலும் IWMS கணினி அமைப்பில் நீண்டகாலமாக குறைபாடுகள் நிலவுவதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தொலைபேசி செயலிகள் மூலம் வீடுகளின் இருப்பிடத்தை (Location) அடையாளம் காண்பதில் பிழைகள் ஏற்படுதல், பதிவேற்றிய தரவுகள் காணாமல் போதல் மற்றும் கணினி வேகம் குறைவடைதல் போன்ற பிரச்சினைகள் நீடிக்கின்றன.
தரவு சரிபார்ப்புப் பணிகளில் முன்னின்று உழைக்கும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு கடந்த ஜனவரி முதல் இதுவரையான (2026) மாதாந்திர கொடுப்பனவு ரூ. 2,500ஐ வழங்கப்படவில்லை.
எனினும், கணினிப் பிழைகளுக்கான பொறுப்பு பிரதேச செயலாளர்கள் மீது சுமத்தப்பட்டு, கள அதிகாரிகளுக்கு நலன்புரி சபை தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இந்தநிலையில் நலன்புரிச் சட்டத்தின்படி அஸ்வெசும களப்பணிகளுக்குப் பொறுப்பான முதன்மை அதிகாரிகளாகக் கருதப்படும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை முறையாக இந்த பணிகளில் உத்தியோகபூர்வமாக ஈடுபடுத்துவதற்கான முறையான வழிமுறையொன்றை உருவாக்கவேண்டும் என குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் IWMS கணினி அமைப்பின் குறைபாடுகளை நீக்கி, அதன் கொள்ளளவை அதிகரித்தல், பயனாளிகளைத் துல்லியமாகத் தெரிவு செய்வதற்காக, இலங்கை மின்சார சபை, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், விவசாய சேவை நிலையங்கள் மற்றும் வரி அதிகாரசபை ஆகியவற்றின் தரவுத்தளங்களை (Databases) அஸ்வெசும கணினியுடன் ஒன்றிக்க வேண்டும் என பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
.jpeg)