அதிகரித்த டீசல் விலையேற்றம்

 


டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அதற்குச் சாதகமான முறையில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாமை குறித்து ஆராய்ந்து, தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக அனைத்துப் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளும் இன்று (02) காலை அவசரமாகக் கூடி ஆராயவுள்ளனர்.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில், இன்றைய கலந்துரையாடலின் பின்னரே பேருந்துப் போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தொழிற்சங்க மட்டத்திலான சந்திப்பு குறித்துக் கெமுனு விஜேரத்ன மேலும் கருத்து வெளியிடுகையில்,

"எங்களது சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பேருந்து சங்கங்களின் தலைவர்கள் இன்று காலை ஒன்றுகூடுகின்றனர்.

பிரதானமாக, இந்த எரிபொருள் விலை உயர்வுப் பிரச்சினையிலிருந்து எங்களது தொழில்துறையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தே இங்கு ஆராயவுள்ளோம். ஏனெனில், அரசாங்கத் தரப்பிலிருந்து இதற்கு முறையான எவ்விதப் பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்கள் தங்களது கொள்கையிலேயே பிடிவாதமாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் பேருந்துகளைத் தொடர்ந்து இயக்குவது நட்டத்தை ஏற்படுத்துவதாகப் பேருந்து உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"இந்தத் தருணத்தில் தொழில்துறையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாகப் பேருந்துப் போக்குவரத்துச் சேவைகளிலிருந்து தற்காலிகமாக விலகி, வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு அனைத்துப் பேருந்து உரிமையாளர்களும் எங்களை வற்புறுத்தி வருகின்றனர்.

எது எப்படியிருந்தாலும், சங்கத்தின் தலைவர்களுடன் இன்று விரிவாகக் கலந்துரையாடிவிட்டு எங்களது இறுதி முடிவை இன்று பகிரங்கமாக அறிவிப்போம்" எனக் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post