கோர விபத்தில் இளைஞர் பலி; தாய் படுகாயம்: தப்பியோடிய சாரதி சிக்கினார்!

 

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும், விபத்து இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

82 பாதுகாப்பு கமராக்களை ஆய்வு செய்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், மாரவில தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் வவுனியாவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

கடந்த 07 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், அவருடன் பின்னால் பயணித்த அவரது தாயார் பலத்த காயங்களுடன் மாரவில ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்றவுடன், டிப்பர் வாகனத்தை நிறுத்தாது அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளார்.

இந்த நிலையில், அந்த வாகனத்தை கைப்பற்ற விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியில் வசித்து வந்த ரித்ம பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை என தெரியவந்துள்ளதுடன், அவரது தந்தையும் சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்.