நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலைமைகளை நேரில் ஆராய்ந்து பலப்படுத்தும் நோக்கில் இராணுவம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து அவசர ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாறப்பன மற்றும் யாழ். மாவட்டத்திலுள்ள பிராந்திய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து, இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வெளியே மற்றும் உள்ளே விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சிறைச்சாலை வளாகத்துக்குள் இருந்த தேவையற்ற இரும்புப் பொருள்கள் உள்ளிட்டவை உடனடியாக அப்புறப்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
