மட்டக்களப்பு சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பு: விசேட அதிரடிப் படையினர் குவிப்பு

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்கள் மற்றும் கலவரச் சம்பவங்களை அடுத்து, மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வெளியே பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை முதல் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து மாற்றப்பட்ட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குக் கொண்டுவந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தீவிரப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சுற்றியுள்ள வீதிகளில் தொடர் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு நேரில் விஜயம் செய்த மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது சிறைச்சாலைச் சூழலில் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாகவும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.