மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் பணம் பெற்றுக் கொண்டு காசோலை கொடுத்தமை தொடர்பில் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா நிதி மோசடி குற்றப் பிரிவுப் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (07.06.2025) இடம்பெற்றுள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாக கூறி ஈபிடிபியின்முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனுடன் இணைந்து செயற்பட்ட ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தினைப் பெற்றுள்ளார்.
அதற்கு பொறுப்பாக தனது காசோலையை அவர் வழங்கியுள்ளார். மதுபானசாலை அனுமதிப்பத்திரம் கிடைக்காத நிலையில், குறித்த காசோலையை வங்கியில் வைப்பிட்ட போது அதில் பணம் இல்லை எனத் தெரிவித்து வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.