இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் கிராமத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள ஒரு தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பாடசாலை 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், (10) மாலை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன், ஒன்பதாம் வகுப்பு மாணவன் மற்றும் ஒரு இளைஞர் ஆகிய மூவரும் அந்த மாணவிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்ததாகவும், அதில் மயக்க மருந்து கலந்து அவரை மயக்க நிலைக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
பதற வைக்கும் CCTV காட்சிகள்,
சம்பவத்தை அறிந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், பொலிஸார் போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences Act) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மயக்க மருந்து கலந்த குளிர்பானம் மூலம் இந்த குற்றம் நடந்ததா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? மாணவியிடம் அத்து மீறிய போது சிறுவர்கள் வீடியோ ஏதாவது பதிவு செய்துள்ளார்களா? என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.
களக்காட்டூர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் பதற வைக்கும் CCTV காட்சிகளை கைப்பற்றிய பொலிஸார் அதனை ஆய்வு செய்வது, சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரிப்பது மற்றும் சந்தேகத்திற்குரிய மூவரையும் விசாரணைக்கு உட்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டிருக்கலாமா என்பது குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வருகிறது.