இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறி இரண்டு நிறுவனங்களால் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அழகுசாதனப் பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 6 ஆம் திகதி ராஜகிரிய பகுதியில் உள்ள இரண்டு நிறுவனங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனையின் போது, இந்த வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களைக் கைப்பற்றியது.
சோதனையின் போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை அழகு சாதன பொருட்களை, இது தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று (24) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதாகக் கூறி, கிரீம்கள் மற்றும் கண்டிஷனர்களை உள்நாட்டில் லேபிள் இட்டு விற்பனைக்காக வழங்குதல், காலாவதியான Body Lotionஐ விற்பனைக்கு வழங்குதல், உற்பத்தியாளர், விநியோகஸ்தர்களின் தகவல் இல்லாமல் Body Lotionஐ விற்பனைக்கு வழங்குதல், பதிவுசெய்யப்பட்ட தகவலை நீக்கி புதிய உற்பத்தி திகதி, காலாவதி திகதியை உள்ளிடுதல் மற்றும் விநியோகஸ்தர்களின் பற்றுச்சீட்டு இல்லாமல் விற்பனைக்கான பொருட்களை காட்சிப்படுத்துதல் ஆகிய ஐந்து குற்றச்சாட்டுகளுக்காக இராஜகிரிய டொனல்ட் அபேசேகர மாவத்தையில் இயங்கிவந்த வர்த்தக நிறுவனமான சென்க் இன்டர்நெஷனல் தனியார் நிறுவனம் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு குற்றச்சாட்டுக்கு 25,000 ரூபா வீதம் மொத்தமாக 125,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோன்று, ராஜகிரிய அம்பகஹ சந்தியில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த எஸ் என்ட் டி டெஸ்டினி தனியார் நிறுவனமும் தவறை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 4 குற்றச்சாட்டுகளின் கீழ் 25,000 ரூபா வீதம் மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்படி இரண்டு வர்த்தக நிறுவனங்களிலிருந்தும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.