இந்தியாவில் ஏற்பட்ட கோர விமான விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு பயணி மட்டும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று பிற்பகல் வேளையில் விபத்துக்குள்ளானது.
குறித்த விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
பிரித்தானிய குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார் என்பவரே உயிர் தப்பியுள்ளார்.
குறித்த விமானத்தில் 169 பேர் இந்தியர்களும் 53 பேர் பிரித்தானிய பிரஜைகளும் ஒரு கனடிய நாட்டவரும் ஏழு போர்த்துகீசிய நாட்டவரும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த கோர விபத்தில் விமான பயணிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட மொத்தம் 246 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை கணவரைச் சந்திக்க லண்டன் புறப்பட்ட புது மணப்பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
எயார் இந்தியாவுக்கு சொந்தமான Boeing 787-8 விமானம் மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான விடுதி மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாமையினால், அங்கிருந்த மாணவர்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.