ரோஜாக்கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி, ‘பார்த்திபன் கனவு’, ‘கனா கண்டேன்’, ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘பூ’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஸ்ரீகாந்த், கோகைன் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் மதுபாரில் நடந்த சண்டையைத் தொடர்ந்து, முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாந்த் கைது செய்யப்பட்டார். அவரது செல்போன் ஆய்வில் போதைப் பொருள் விநியோகம் தொடர்பான தகவல்கள் வெளியாகின.

பிரசாந்த், பிரதீப் என்பவரிடம் கோகைன் வாங்கியதாக ஒப்புக்கொண்டார். பிரதீப், இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, விசாரணையில் ஸ்ரீகாந்துக்கு கோகைன் வழங்கியதாகக் கூறினார்.
பிரதீப், ஸ்ரீகாந்த் 40 முறை ஒரு கிராம் கோகைனை 12,000 ரூபாய்க்கு வாங்கி, மொத்தம் 4.72 லட்சம் ரூபாய் செலவிட்டதாகவும், பெங்களூருவில் இருந்து கோகைன் வாங்கி வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இவர், பிரசாந்துடன் இணைந்து, சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டிகளுக்கு கோகைன் வழங்கியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்த காவல் துறை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்தது.
இதில், கோகைன் பயன்பாடு உறுதியானதால், ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, ஜூலை 7, 2025 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். விசாரணையில், இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணாவுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
காவல் துறை, ஸ்ரீகாந்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தவும், மற்ற சினிமா பிரபலங்களை விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கில் கைதானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, நடிகர் ஸ்ரீகாந்திற்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது. இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.