இந்தாண்டு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஸ்வாமி பிரதிபாந்தா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை முறைப்பாடு அளித்துள்ளார்.
பாரத் சேவாஸ்ரம சங்கத்தின் முர்ஷிதாபாத் பிரிவில் பிரதிபாந்தா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆசிரமத்தின் பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறியும் பின்னர் மிரட்டியும் கடந்த 2013 முதல் தன்னை பலமுறை பிரதிபாந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் முறைப்பாடு அளித்துள்ளார்.முறைப்பாட்டுக்கு அமைவாக, பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2012 டிசம்பரில் பிரதிபாந்தாவை சந்தித்தார். பள்ளியில் வேலை தருவதாக உறுதியளித்து அவரை ஆசிரம விடுதியில் தங்க வைத்துள்ளார். பின்னர் தினந்தோறும் அப்பெண்ணை 5ஆவது மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அப்பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவதாக கூறி விடுதியிலிருந்து அனுப்பி வைத்தார். இடையில் 2013 இல் அப்பெண்ணை ஆசிரம பள்ளி ஊழியர்கள், தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.
அதை அப்பெண் எதிர்த்த போதிலும் வைத்தியர் மற்றும் ஆசிரம ஊழியரகள் முன்னிலையில் அவரை மிரட்டடி அதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதுபோல முர்ஷிதாபாத்தில் உள்ள ஆசிரமத்தின் வெவ்வேறு கிளைகளுக்கும் அவரை அழைத்துச்சென்று வன்கொடுமைக்கு செய்து வந்துள்ளார். தான் மனரீதியாக உடைந்த நிலையில் இருந்து வந்தேன் என்று அப்பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த ஜூன் 12 ஆம் திகதி அப்பெண் சாமியாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரை ஜூன் 13 இரவு பெராபூர் என்ற இடத்துக்கு வரச்சொல்லியுள்ளார்.
அங்கு சென்ற தன்னை 2 நபர்கள் அணுகி, மீண்டும் ஸ்வாமிஜியை தொடர்பு கொள்ள கூடாது என்று மிரட்டி வாகனத்திலிருந்து தள்ளி விட்டனர் என்று அப்பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இது எல்லாம் தன்மீதான அவதூறு என பிரதிபானந்தா மறுத்துள்ளார்.