இந்தியாவின் கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் முகம்மது சாலி என்கிற 'ஷாலு கிங்' கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது சாலி என்கிற ஷாலு கிங். கேரளாவில் பிரபல யூடியூபரான இவர், 'ஷாலு கிங் மீடியா', 'ஷாலு கிங் வ்லாக்ஸ்' மற்றும் 'ஷாலு கிங் குடும்பம்' என பல்வேறு யூடியூப் சேனல்களை வைத்துள்ளார். பல லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இவர், இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் திகழ்ந்து வருகிறார். 35 வயதான முகம்மது சாலிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டே திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வந்த சாலிக்கு, இன்ஸ்டா மூலம் சிறுமி ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. சாட்டிங், டாக்கிங் என தொடர்ந்து வந்த இவர்களது பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த சிறுமியை திருமணம் செயது கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்கும் இடையிலான உறவு குறித்து அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், சாலியை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியிருக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத சாலி தொடர்ந்து சிறுமியுடன் தனது பழக்கத்தைத் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கோயிலாண்ட பொலிஸில் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் வழக்கு பதிந்து அவரைத் தேடிச் சென்றபோது அவர் வெளிநாடு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனால் பொலிஸார் சாலிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். வெளிநாட்டில் விசா காலம் முடிவடைந்து மீண்டும் இந்தியா திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டதையடுத்து, சாலி மங்களூரு விமான நிலையம் மூலமாக பொலிஸாருக்கு தெரியாமல் இந்தியாவுக்குள் ஊடுருவ நினைத்துள்ளார்.
ஆனால், மங்களூரு விமான நிலையத்திற்கு சாலி வந்தடைந்ததும் குடியேற்ற அதிகாரிகள் அவரை கண்டுபிடித்து விட்டனர். சாலியை தடுத்து நிறுத்தி உடனே கேரள பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மங்களூரு விமான நிலையத்தில் கோயிலாண்டி பொலிஸார் அவரை கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு கோயிலாண்டி ஜே.சி.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
மேலும் இவர் மீது இதேபோன்ற வேறு ஏதேனும் புகார்கள் உள்ளதா? என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். சிறுமியிடம் அத்துமீறிய விவகாரத்தில் பிரபல கேரள யூடியூபர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.