மயிலாடுதுறை : மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் உமா மகேஸ்வரி (38) என்ற பெண்ணை, மாரிமுத்து (56) என்பவர் கொலை மிரட்டல் விடுத்து கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக உமாவின் தாய் தனலட்சுமி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்து, தனது மகளை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

உமா மகேஸ்வரி, தந்தையின் வேலை கருணை அடிப்படையில் கிடைத்த நகராட்சி பணியில் ஈடுபட்டு, தனது தாய் தனலட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், மாரிமுத்து என்பவருடன் தனலட்சுமிக்கு முதலில் நட்பு ஏற்பட்டது. பின்னர், மாரிமுத்துவின் பார்வை உமா மகேஸ்வரியின் மீது திரும்பியது. 18 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்த போதிலும், உமா மகேஸ்வரி மாரிமுத்துவின் காதல் வலையில் வீழ்ந்தார்.
ஆனால், மாரிமுத்துவின் உண்மையான குணம் பின்னர் தெரியவந்தது.மாரிமுத்து, உமாவை சந்தேகப்பட்டு, அவரை அடித்து கொடுமைப்படுத்தத் தொடங்கினார். “நீ எனக்கு தேவையில்லை, உன்னை கொலை செய்து விடுவேன்,” என பத்து நிமிட ஆடியோவில் கொலை மிரட்டல் விடுத்ததாக உமா தெரிவித்துள்ளார்.
அலுவலகத்தில் ஆண்களுடன் பேசவோ, வணக்கம் சொல்லவோ கூடாது என மிரட்டிய மாரிமுத்து, “நீ எனக்கு கிடைக்காவிட்டால், தேடி வந்து கொலை செய்வேன்,” என அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் பயந்து போன உமா, மாரிமுத்துவிடம் இருந்து விலக முயன்றார்.
ஆனால், மாரிமுத்து ஆட்களை வைத்து உமாவை கடத்தி, வலுக்கட்டாயமாக தாலி கட்டினார். காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், உமா மாரிமுத்துவுடன் செல்வதாக கூறியதால், தாய் தனலட்சுமி வேறு வழியின்றி அனுப்பி வைத்தார்.
பின்னர், ஊரறிய திருமணமும் நடைபெற்றது.ஆனால், மாரிமுத்துவின் கொடுமைகள் தொடர்ந்தன. உமாவை அவர் முழு நேரமும் கண்காணித்து, அலுவலகத்தில் அடித்து, ஆபாசமாக பேசி அவமானப்படுத்தினார். இதனால் மனமுடைந்த உமா, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்து, கணவனை பிரிந்து, தாயுடன் வாடகை வீட்டில் தங்கினார்.
சம்பவத்தன்று, மாரிமுத்து ஆட்களுடன் சைலோ காரில் வந்து, சாலையில் நடந்து சென்ற உமாவை, அவரது தாயை தள்ளிவிட்டு கடத்திச் சென்றார். தனது மகளுக்கு மாரிமுத்து “மூச்சுக்கு 300 முறை கொலை செய்வேன்” என மிரட்டியதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தனலட்சுமி அஞ்சுகிறார்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். “எனது மகளை மீட்டுத் தர வேண்டும்,” என காவல் நிலைய வாசலில் கண்ணீருடன் நின்று கோரிக்கை விடுத்துள்ளார்.
காவல் துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.