கல்விச் சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்களில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துக்களுக்கு செவிமடுத்து, மேலும் தரமான சீர்திருத்தத்தை மேற்கொள்வோம்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய -
கல்வி சீர்திருத்த உரையாடல்களில் இருந்து எழும் முன்மொழிவுகள், புகார்கள் மற்றும் கருத்துகளைச் செவிமடுத்து மேலும் தரமான சீர்திருத்தத்தை மேற்கொள்வதாகவும், இந்தச் சீர்திருத்தம் ஒரு கட்சி அல்லது குழுவின் செயற்பாடு அல்ல, மாறாக தேசிய பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து மத்திய மாகாண அதிகாரிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக இன்று (31ஆம் தேதி) கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரதமர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மேலும் உரையாற்றிய பிரதமர்
கல்வி அமைச்சு 2024ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், ஆண்டுதோறும் 20,000 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறுகின்றனர், ஆனால் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை என்று தெரியவந்தது.
அதேபோன்று, பாடசாலை செல்லும் பிள்ளைகளில் 80000 பேர் சரியாக பாடசாலைக்கு வருவதில்லை. ஆண்டுதோறும் மூன்று லட்சம் மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த பிள்ளைகளில், சுமார் 1,50,000 பேர் பல்வேறு கட்டங்களில் பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறி தொழிற்கல்விக்கோ அல்லது தனியார்க் கல்விக்கோ செல்கின்றனர். சுமார் 40,000 பேர் அரச பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுகின்றனர். எனினும், மீதமுள்ள பிள்ளைகளுக்கு என்ன நடக்கிறது மற்றும் அவர்களின் எதிர்காலம் என்ன என்பதில் யாரும் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நமது பாடசாலை அமைப்பில் 13 ஆண்டுகள் கல்வி பெற்று பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகளால் எளிதில் தொழில் உலகில் நுழைய முடியாமல் போயுள்ளது.
பாடசாலையில் இருந்து பெறப்படும் கல்வி வேலைவாய்ப்பு பெறுவதற்கு போதுமானதாக இல்லை. இது குறிப்பாக நமது பெண் மாணவிகளை அதிகம் பாதித்துள்ளது. நமது பெண் பிள்ளைகள் பாடசாலையில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினாலும், தொழிற் சந்தையில் நுழையும்போது, பெண்களின் பங்கேற்பு ஆண் மாணவர்களை விட 50% க்கும் மேல் குறைவாக உள்ளது.
கல்வித் தகைமைகள் இருந்தும், தொழிற் சந்தையில் நுழைவது கடினமாகிவிட்டது. அதற்கு கல்வி மாத்திரமல்ல வேறு பல காரணிகளும் இருக்கின்றன. அதேபோன்று, இன்று நாம் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் மற்றும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததில் இருந்து ஒட்டுமொத்த சமூக செயல்முறையினுள், ஒத்துணர்வு, சகிப்புத்தன்மை மற்றும் பொது அறிவுடன் வேலைவாய்ப்பில் நுழையக்கூடிய பொறுப்புள்ள சமூகத்தை கல்வியின் மூலம் உருவாக்குவதும் இந்தக் கல்வி சீர்திருத்தத்தின் நோக்கமாகும்.
குறிப்பாக நவீன தொழில்நுட்ப உலகில் மற்றும் வேகமாக மாறிவரும் சமூகத்தில், சமாளிக்கவும் தொடர்புகொள்ளக் கூடியதுமான பிள்ளையை நாம் உருவாக்க வேண்டும். தகவல்கள் நம்மால் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் நம்மிடம் வருகின்றன. எனினும், பிள்ளைகள் தகவல்களை பகுப்பாய்வு செய்யும் திறனையும் அதன் உண்மை மற்றும் பொய் குறித்து கருத்துகளை வேறுபடுத்தி நோக்கும் திறனை கொண்ட நபர்களாக மாற வேண்டும். ஆராய்ச்சி மனப்பான்மையுள்ள பிள்ளைகளே எதிர்கால உலகிற்குத் தேவை.
பரீட்சை முடிவுகளுக்கு மட்டும் வரம்பிடப்படாத புதிய தெரிவுகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு பொறிமுறையை நாங்கள் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
இது மாகாண அளவில் நாம் நடத்தும் ஏழாவது உரையாடல், இந்த உரையாடல்கள் ஒவ்வொன்றிலிருந்தும், சீர்திருத்தங்கள் எவ்வாறு மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து மிக முக்கியமான முன்மொழிவுகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கல்வித்துறை அதிகாரிகளுடன் கூடுதலாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் சங்கங்களுடன் உரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். இந்த அனைத்து உரையாடல்களின் முன்மொழிவுகளும் எங்களுக்கு மிக முக்கியமானவை.
இது ஒரு அரசியல் கட்சி அல்லது குழுவின் பொறுப்பு அல்ல. இது ஒரு தேசியத் திட்டம், எனவே தேசிய உரையாடல் நடைபெற வேண்டும். அந்த உரையாடலில் இருந்து எழும் முன்மொழிவுகள், புகார்கள் மற்றும் கருத்துகளைச் செவிமடுக்கவும், அதற்கேற்ப சாத்தியமான மாற்றங்களைச் செய்யவும் நாங்கள் தயார்.
இதை உரையாடல் மூலம் மட்டும் செய்ய முடியாது; நாம் எங்காவது தொடங்க வேண்டும். எனவே, அடுத்த ஆண்டு முதல், முதலாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் புதிய கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் தொடங்குவோம் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, புத்த சாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ உட்பட கல்வி அதிகாரிகள் மற்றும் மத்திய மாகாண அதிகாரிகள் இந்தச் சந்தர்ப்பத்தில் பங்கேற்றனர்.