குறைகளை தீர்ப்பதில் கிராம அலுவலர் பிரிவு மட்டக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் தகவல்களை புதுப்பித்தல் குறித்த பயிற்சியாளர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (01.07.2025) காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நலன்புரி நன்மைகள் ‘அஸ்வெசும’ திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளும் தெரிவு செய்யப்படாமலிருப்பதாக பல முறைப்பாடுகள் வருகின்றன எனவும், அதனை நாம் தெரிவுப் பொறிமுறையில் (System) பிழை என தட்டிக்கழிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும், இத் திட்டத்தில் சரியான பயனாளிகளை உள்வாங்க வேண்டும் எனவும், அதற்கு பயனாளிகளின் மனக்குறைகளை எவ்வாறு கையாள்வது என்பதில் இப் பயிற்சி செயலமர்வினை உத்தியோகத்தர்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பயிற்சி செயலமர்வின் மூலம் கிராம மட்டத்தில் மனக்குறைகளை எவ்வாறு தீர்த்து தீர்வைக் காண்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் கிராம மட்டத்திலும் தீர்க்கும் குழு நியமிக்கப்பட்டு பொறிமுறைகள் உருவாக்கப்படு தீர்வு காணப்படும் என்பதுடன், பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலும் தீர்க்கும் குழு நியமிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கை. சிவகரன், நிபுணர் திரு. அமல் பிரியந்த, உதவி ஆணையாளர் எந்திரி இராஜசுரேஷ், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, வடக்கு மாகாணங்களின் மாவட்ட இணைப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேசங்களில் இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

