சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 2025 ஜூன் 27 அன்று நடந்ததாகக் கூறப்படும் நகை திருட்டு சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 29) என்பவர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையின்போது உயிரிழந்தார்.

இது குறித்து பல மர்மமான கேள்விகள் எழுந்துள்ளன, மேலும் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு.. தற்போது CBI-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கீழே விரிவாகப் பார்க்கலாம்.
1. உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்?
2. அம்மா / மகள் இருவரில் அது யாருடைய நகை? என்ன நகை அது?
3. மதுரையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மடப்புரம் கோயிலுக்கு காரை ஓட்டி வந்த நிகிதா, காரின் சாவியை முன்பின் பழக்கமில்லாத மூன்றாம் நபரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யச் சொன்னது ஏன்?
4. கார் ஓட்டத் தெரியாத அஜித்குமார், காரை பார்க் செய்ய ஒப்புக்கொண்டு சாவியை ஏன் பெற்றுக்கொண்டார்?
5. காரில் நகை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது அணிந்து கொள்ள வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வு ஏன் அம்மா-மகள் இருவருக்கும் ஏற்படவில்லை?
6. அஜித்குமாரிடம் சாவியை பெற்று காரை ஓட்டி பார்க் செய்த நான்காவது நபர் யார்?
7. நகை காணவில்லை என்றதும், புகார் திருப்புவனம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டதா?
8. மானாமதுரையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்து சீருடை அணியாமல் தனிப்படை வந்தது ஏன்?
9. திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் விசாரணை நடந்தது ஏன்?
10. "தப்பி ஓடும்போது தடுக்கி விழுந்து காக்கா வலிப்பு ஏற்பட்டு மரணம்" என்ற பொய் FIR ஏன் பதிவு செய்யப்பட்டது?
11. உயர் அதிகாரிகள் யார்?
12. 10 பவுன் நகைக்காக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்தது ஏன்?
13. நிகிதா மற்றும் சிவகாமி யார்? அவர்களின் பின்னணி என்ன?
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாமாக முன்வந்து எடுக்கப்பட்டு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியா கிழார் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அஜித்குமாரை தாக்கும் வீடியோவை வழக்கறிஞர் ஹென்றி திபேன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார், மேலும் இந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜராகி, பயம் காரணமாக தான் தப்பி ஓடியதாகக் கூறினார்.
நீதிபதிகள், "அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" என்று கடுமையாகக் கண்டித்து, காவல்துறையினருக்கு சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் இருந்ததாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையில் 18 காயங்கள் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த வழக்கில், ஆறு காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மேலும் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், நீதி விசாரணை கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மடப்புரம் கோயில் நகை திருட்டு வழக்கு, ஒரு சாதாரண திருட்டு புகாராகத் தொடங்கி, காவல்துறையின் முறைகேடு மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அஜித்குமாரின் மரணம், காவல்துறையின் கொடூரமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. நகை திருட்டு குறித்த மர்மங்கள், காவல்துறையின் அவசர நடவடிக்கைகள், மற்றும் சிவகாமி-நிகிதாவின் பின்னணி ஆகியவை இன்னும் தெளிவாக வேண்டியுள்ளன.
சிபிசிஐடி விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைகள் இந்த மர்மங்களுக்கு விடை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.