இன்றும் கண்முன்னே அற்புதம் நிகழ்த்திய நயினை நயினை நாகராணி-மெய் சிலிர்த்த பக்தர்கள்..!{படங்கள்}

 

நயினை நாகதேவியின் உற்றசவம் நடைபெற்றும் வரும் நன் நாளில் இன்று நடந்த திருவிழாவில் அம்மன் வீதியுலா வருகையில் கருடன் வந்து வழிபட்டது-தொடர்ந்து வானிலே சுற்றி அம்மனை வரவேற்றதை பாரத்த பக்கதர்கள் மெய்சிலிர்த்து போயிருந்தனர்.

வாருங்கள் பார்க்கலாம் நயினை நாகராணிக்கு அப்படி என்ன சிறப்பு..!

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் பழைமையும் சிறப்பும் 💙


ஈழத்தில் நயினாதீவு வரலாற்று பழமை மிக்கதொரு இடமாகும். இந்த தீவில் நாகர்களின் ஆதிக் குடியிருப்பாலும், அங்கு இடம் பெற்ற நாக வழிபாட்டாலும், நாகங்கள் அதிகமாக அங்கு வாழ்ந்ததாலும் நாகதீவு என்றும், நயினாதீவு என்றும் பெயர் வழங்கப்பட்டது. 


நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினாதீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. 


ஈழத்தின் பழம்பெரும் அம்மன் கோவில், 64 சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழும் ஆலயம், அம்மன் சுயம்புவாக தோன்றிய திருத்தலம், தலபுராணச் சிற்பங்கள் நிறைந்த சித்திரத் தேர் கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு விளங்குவது, நயினாதீவு நாகபூஷணி அம்மன் திருக்கோவில்.


முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வழிபாட்டுத் தலங்களில், ஈழ நாட்டில் உள்ள ‘நயினாதீவு’ம் ஒன்றாகும். 64 சக்தி பீடங்களில் இது, புவனேஸ்வரி பீடமாக திகழ்கின்றது. காளிதாசரால் வணங்கப்பட்ட தலங்களுள் இதுவும் ஒன்று.


நயினாதீவில் கோவில் கொண்டுள்ள நாகபூஷணி அம்மன் வரலாறு, மிகவும் தொன்மையானதாகும். கருவறையில் உள்ள மூலவர் சிலையானது, காந்தார சிற்பக் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையின் வடிவத்தை, இந்தியாவில் இருந்து வந்த நயினாபட்டர் என்ற வேதியர் பூஜித்து வந்தார். நயினாதீவுக்கு அருகில் உள்ள புளியந்தீவில் இருந்த நாகமொன்று, அம்மனைத் தரிசிக்க தினந்தோறும் கடலில் நீந்தி வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு வரும் போது, அம்மனுக்கு அர்ச்சனை செய்ய, புளியந்தீவில் இருந்து பூக்களை கொண்டு வருவது வாடிக்கை.


ஒருநாள் வழக்கம் போல் பூக்களுடன் நீந்தி வந்த நாகத்தை, கருடன் ஒன்று உணவாக்க முயன்றது. இதனால் பதறிய நாகம், கடலில் எழும்பி நின்றிருந்த கல் பாறை ஒன்றில் ஒதுங்கியது. அந்த இடத்திற்கு வந்த கருடனுக்கும், நாகத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது.


அந்த நேரத்தில் வாணிகம் செய்வதற்காக காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து, கப்பல் மூலம் இலங்கை சென்று கொண்டிருந்தான் மாநாயக்கன் என்ற வணிகன். அவன் நாகத்தை கருடன் கொல்ல முயல்வதைக் கண்டு மனம் இரங்கினான். நாகத்தை காப்பாற்றும் நோக்கில் கருடனிடம், ‘நாகம் அம்மனை வழிபடும் நோக்கத்தைத் தடுக்க வேண்டாம்’ என்று வேண்டினான்.


அதற்கு கருடன், ‘ஐயா! அம்மன் மீது உமக்கு பக்தி இருக்குமானால், கப்பலில் உள்ள உன் பொருட்கள் அனைத்தையும் அம்மன் ஆலயத்திற்குத் தர சம்மதம் சொல்வீரா? அப்படி நீ ஒப்புக்கொண்டால், நானும் உமக்காக இந்த நாகத்தை விட்டு விடுகிறேன்’ என்றது.


கருடனின் சவாலுக்கு வணிகன் ஒப்புக்கொண்டான். தான் கப்பலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கோவிலுக்கு வழங்கி விட்டான். இதனால் நாகம் விடுதலை பெற்று, வழக்கம் போல அம்மனை வழிபட்டது. வணிகன் கொடுத்த பொருட்களைக் கொண்டு கோவில் அழகாகவும், சிறப்பாகவும் கட்டமைக்கப்பட்டது.


நயினாதீவின் அருகே பாம்பு சுற்றிய கல் இருப்பதையும், கருடன் கல் இருப்பதையும் இன்றும் காணலாம். இது இத்தலம் குறித்து கூறப்படும் கர்ண பரம்பரைக் கதையாகும்.


இவ்வாறு சிறப்புற்றிருந்த ஆலயம், ஒல்லாந்தர் என்னும் போர்ச்சுக்கீசியர் காலத்தில் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் சுவடுகள் இன்றும் கடலின் அடியில் காணப்படுவது, இதனை உறுதி செய்கின்றது. போர்ச்சுக்கீசியர் போர்தொடுக்கும் முன்பாக, ஆலயத்தின் முக்கிய மூர்த்திகள், பொருட்களை பக்தர்கள் மறைத்து வைத்தனர்.


அம்பாளை ஆலய மரப் பொந்தில் வைத்து வழிபட்டனர். டச்சுக்காரர் ஆட்சிக்குப் பின்பு, நயினாதீவில் நாகேஸ்வரி கோவில் சிறிய அளவில் மீண்டும் எழுப்பப்பட்டது. இதன்பிறகு அழகிய கோபுரம் அமைக்கப் பட்டது. 1935-ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலைச் சுற்றி மடங்களும் உருவாக் கினர். 1951-ல் விமானங்கள் புனரமைக்கப்பட்டு குட முழுக்கு நடைபெற்றது.


வரலாறு :


நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. தமிழர்களின் முன்னோர்களான நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்பட்டது.


 நாகவழிபாடு.


ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. 


நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாக வழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது. 


ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாடாகக் காணப்பட்ட நாக வழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாக வழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் என உருமாற்றம் பெற்றன.


ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். 


இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. 


வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது. 


சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.


இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும், ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரானிடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொல்ல எத்தனிக்கும் பொழுது அவ்வழியே வந்த வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான் என்றும், மகாபாரதத்தில் அர்சுனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு (நயினாதீவு) வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்றும் அழைப்பர்.


மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான் இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டை மண்டலத்தேசத்தவரும் ஆவர். எனவே நயினாதீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பல புராண இதிகாசங்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியமுடிகிறது.


நாகபூஷணி அம்மன் :


கருவறையில் அமைந்துள்ள சுயம்பு நாகபூஷணி அம்மன், நீள்உருளை வடிவத் திருமேனியராக எழிலாக காட்சி தருகின் றாள். என்றாலும், அலங்காரத்தால் அன்னை யின் முகம் மட்டுமே காட்சியளிக்கிறது. பின்புறம் சீறும் நாகமாக ஐந்து தலை நாகம் உள்ளது. இத்திருமேனிகள் பழமையானவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இங்கு ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், விஷ்ணு ஆகிய ஐவரின் பூஜை நாட்கள் மாதந்தோறும் நடத்தப்படுகின்றன. பகலில் சங்காபிஷேகம், இரவில் ஸ்ரீசக்கர பூஜை நடைபெறுகிறது. விஜயதசமி மற்றும் வன்னிமர பூஜையும் நடத்தப்படுகின்றன.


ஆனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற் சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் இலங்கை மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். திருவிழாவின் 14-ம் நாள் தேரோட்டம் நடைபெறும்.


இவ்வாலயம் 1986-ம் ஆண்டு முதல் பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் சபையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ஆலய பூஜைகள், கயிலாசநாத குருக்கள் என்பவரது பரம்பரையால் சுமார் 250 ஆண்டுளாக நடத்தப்படுகின்றன. ஆலய தல மரம் வன்னி, தல தீர்த்தம் தீர்த்தக்கேணி ஆகும்.


இலக்கியங்கள் :


யோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய ‘மனோன்மணி மாலை’, அமரசிங்கப்புலவர் இயற்றிய ‘நயினை நாகபூஷணியம்மை திரு ஊஞ்சல்’, வரகவி முத்துக்குமாருப் புலவர் இயற்றிய ‘நயினை நாகபூஷணியம்மை திருவிருத்தம்’, வரகவி நாகமணிப்புலவர் எழுதிய ‘நயினை மான்மியம்’, வேலனை தம்பு உபாத்தியார் இயற்றிய ‘திருநாக தீபப் பதிகம்’, க.ராமச்சந்திரன் இயற்றிய தேவி பஞ்சகம், நயினைத் தீவு சுவாமிகள், கவிஞர் செல்வராஜன் இயற்றிய பாடல்கள் என எண்ணற்ற இலக்கியங்கள் அன்னையைப் புகழ்கின்றன.


நாகபூஷணித் தேர் :


இலங்கை நாட்டின் தேர்களில் நாகபூஷணி ஆலயத் தேர் தனித்துவம் வாய்ந்தது. இத்தேரில் வரலாற்று நிகழ்வு, கிருஷ்ணர், அஷ்டலட்சுமி, நாகம் புளியந்தீவில் பூப்பறித்தல், கருடன் காத்திருப்பது, மணல் லிங்கம் எழுப்பி வழிபடும் காமாட்சி போன்ற வரலாறுகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், தேரில் நாகபூஷணி பவனிவர, தேரோட்டியாக பிரம்மனின் மனைவி பிரமாணி இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மூன்று வரிசையில், எட்டுத்திசைகளிலும், மரச்சிற்பங்கள் கலைநயத்தோடு மிளிர்கின்றது.


தொன்மைச் சிறப்பு :


ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம், நயினா தீவை ‘மணிபல்லவம்’ என்று குறிப்பிடுகிறது. 


நயினாதீவு பண்டைய காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியதை இங்கு கிடைத்த தொல்லியல் சான்றுகள் உறுதி செய்கின்றன.


நாகர்கள் வாழ்ந்த காலத்திலேயே நயினாதீவில் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஏறத்தாழ 14000 ஆண்டுகளுக்கு முன்பே நயினாதீவில் குடியேற்றம் இருந்தது என்றும். அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட நாகபூசணி அம்மன் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள நாக விக்கிரகம் 14000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்றும் கட்டிட, சிற்பக்கலை பொறியியல் நிபுணரான திரு. எம். நரசிம்மன் அவர்கள் தனது நூலில் (11.03.1951) குறிப்பிட்டுள்ளார்.


ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 2 மணி, மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.


அமைவிடம் :


இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்து மகா சமுத்திரத்தில் உள்ள நயினாதீவில் நாகபூஷணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து 431 கி.மீ. தூரத்திலும், யாழ்ப்பாணம் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும் நயினா தீவு அமைந்துள்ளது. 


யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் படகுத்துறை வரை பேருந்து செல்கிறது. அங்கிருந்து எந்திரப்படகு மூலம் நயினாதீவுக்குச் சென்று வர வேண்டும்.








கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.