திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. பள்ளிப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் இவருக்கு மனைவி அமுதாவும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
எளிய குடும்பமாக வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்க்கையில், அமுதாவின் மனதில் எழுந்த கள்ளக் காதல் புயலாக உருவெடுத்து, அவர்களின் வாழ்வையே புரட்டிப் போட்டது. அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருடன் அமுதாவுக்கு ரகசியக் காதல் மலர்ந்தது.

இந்தக் காதல் மோகத்தில், கணவன் பாபுவையும், இரு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு, ஜோதீஸ்வரனுடன் அமுதா ஓடிப்போனார். 20 நாட்களாக உறவினர்கள் தேடுதல் வேட்டை நடத்தி, பாண்டிச்சேரியில் காதலனுடன் குடித்தனம் நடத்தி வந்த அமுதாவை மீட்டு, பாபுவிடம் ஒப்படைத்தனர்.
குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, பாபு மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.ஆனால், அமைதி நீடிக்கவில்லை. சில நாட்களிலேயே அமுதா மீண்டும் ஜோதீஸ்வரனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். உறவினர்கள் மறுபடியும் அவரை அழைத்து வந்தனர்.
இருப்பினும், காதல் வெறியில் மூன்றாவது முறையாக, இரண்டு மாதங்களுக்கு முன் ஜோதீஸ்வரனுடன் அமுதா மாயமானார். இம்முறை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தைகளுக்காக வெட்கத்தை விட்டு, ஊர் ஊராகத் தேடிய பாபு, இறுதியில் புழல் அருகே மனைவியைப் பார்த்தார்.
ஆனால், அமுதாவின் நிலை பரிதாபமாக இருந்தது. ஜோதீஸ்வரன் தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றதாகவும், மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறிய அமுதா, பாபுவிடம் பேசிவிட்டு மீண்டும் எங்கோ சென்றுவிட்டார்.நாட்கள் கடந்தன.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய குப்பம் கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில், அமுதா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பாபுவுக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்று பார்த்தபோது, அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.
தகவலறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் டவுன் காவல்துறையினர், சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, அமுதாவின் உடலை மீட்டு, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பாபு காவல்துறையிடம் அளித்த புகாரில், மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
கணவனையும், குழந்தைகளையும் புறக்கணித்து, காதல் மோகத்தில் தடம் புரண்டு சென்ற அமுதாவின் வாழ்க்கை, அனாதையாக ஒரு சடலமாக முடிந்தது. திருமணத்தைக் கடந்த காதலின் விபரீத முடிவு, பாபுவையும் அவரது குழந்தைகளையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சம்பவம், காதல் என்ற பெயரில் எடுக்கப்படும் முடிவுகளின் விளைவுகளை எச்சரிக்கும் சோகமான பாடமாக அமைந்துள்ளது.