சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த 32 வயது தமிழ்வாணன், திருமணக் கனவுடன் பல ஆண்டுகளாக பெண் தேடி அலைந்தார். சொந்த வீடு இல்லை, வயது அதிகம், உடல் பருமன் என பல காரணங்களால் பெண் வீட்டார் அவரை நிராகரித்தனர்.
ஆனாலும், நம்பிக்கையை இழக்காத தமிழ்வாணன், உறவினரான சேலத்தைச் சேர்ந்த திருமண புரோக்கர் மகேஷ் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது.கடந்த ஏப்ரல் 14 அன்று, மகேஷ் தமிழ்வாணனையும் அவரது குடும்பத்தையும் விருதுநகர் முருகர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, மற்றொரு புரோக்கர் கமலா மூலம் மேட்டூரைச் சேர்ந்த சிவா என்ற புரோக்கர் அறிமுகமானார். காலை 11 மணியளவில், 36 வயது பூஜா என்ற பெண்ணை தமிழ்வாணனுக்கு அறிமுகப்படுத்தினர்.
பெண்ணைப் பிடித்துப்போன தமிழ்வாணன், திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால், புரோக்கர்கள் 2 லட்சம் ரூபாய் கேட்டனர். பேரம் பேசி, 1.5 லட்சமாக முடிவானது. தமிழ்வாணன் குடும்பம் 1.35 லட்சம் ரூபாயை உடனடியாகக் கொடுத்து, மீதி 15,000 ரூபாயை சென்னை சென்று தருவதாக உறுதியளித்தனர்.
அன்று மாலையே, பூஜாவுக்கு பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்து, முருகர் கோயிலில் திருமணம் நடந்தது. சென்னைக்குத் திரும்பிய தமிழ்வாணன், புது வாழ்க்கையை எதிர்பார்த்தார். ஆனால், இரண்டு நாட்களில் பேரிடி இறங்கியது. முதல் இரவிலேயே பூஜா மது கேட்டு அடம்பிடித்தார்.
கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என தமிழ்வாணன் அறிவுறுத்தியதால், தாம்பத்யத்திற்கே தடை விதித்தார். மறுநாள், 10,000 ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்த பிறகு, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக பிரபல அங்காடிக்கு சென்றபோது, கூட்டத்தைப் பயன்படுத்தி, பூஜா தமிழ்வாணனின் 10 சவரன் நகை, பட்டுச் சேலைகள், ரொக்கப் பணத்துடன் தலைமறைவானார்.
ஏமாற்றத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் தமிழ்வாணன். திருமண புரோக்கர்களால் ஏமாற்றப்பட்டதாகவும், பூஜாவின் நோக்கம் முதலிலிருந்தே பணத்தை அபகரிப்பதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், திருமணத்தின் பெயரில் நடக்கும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தமிழ்வாணனின் கனவு திருமணம், இரண்டு நாட்களில் நொறுங்கிய சோகக் கதையாக மாறியது.