அரச சேவையில் சுமார் 70,000 ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் சுகாதார சேவைக்கு 1900 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சுகாதார ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் விசேட திட்டம் ஒன்றும் சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அம்பாறையில் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கிடையில் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்ட சுகாதார அதிகாரிகள் என்றவகையில் இம்மாவட்டத்தின் சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
சுகாதார சேவையில் குறைபாடுகள் உள்ள போதிலும் அவற்றை கருத்தில் கொள்ளாது நோயாளர்களுக்காக சுகாதார ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.
சுமார் 70 ஆயிரம் ஊழியர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. அவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் சுகாதார ஊழியர்களாவர்.
அத்தோடு இத்துறையில் உள்ள மனித வளத் தேவையை நிறைவு செய்வதற்காக தாதியர் நியமனத்துக்கான ஆட்சேர்ப்பும் மேற்கொள்ளப்பட உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நீண்டகாலமாக நிலவிவரும் ஊழியர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு அதிகமான சுகாதார ஊழியர்கள் அப்பகுதிகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.
சுகாதார சேவையின் கடந்த காலங்களில் நிலவிய தவறான நியமன முறையை சீர் செய்ய எதிர்வரும் இரு மாதங்களில் சுமார் 1900 புதிய நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சுகாதார ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் விசேட திட்டம் ஒன்றும் சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அத்தோடு இடை நறுத்தி வைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கட்டிட நிர்மாணப் பணிகளை எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்வதற்காக மாத்திரம் 45 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது“ என தெரிவித்தார்.
