கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியைச் சேர்ந்த அனில்குமார் (38), ஆட்டோ ஓட்டுநராகவும், மளிகைக் கடை நடத்தியும் வந்தவர். ஆட்டோ வருமானம் போதுமானதாக இல்லாததால், மனைவி தன்யா (34) மளிகைக் கடையைப் பராமரித்து வந்தார். ஆனால், இவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் கொடூர சம்பவமாக முடிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் அனில்குமார் கடைக்கு வந்தபோது, தன்யாவும், அதே பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மதுகுமாரும் (40) தகாத உறவில் இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
கோபத்தை அடக்கி, பொது இடத்தில் மனைவியை அவமானப்படுத்த விரும்பாத அவர், வீட்டில் தன்யாவிடம் வாக்குவாதம் செய்து, கடைக்கு வர வேண்டாமென எச்சரித்தார். ஆனால், தன்யாவும் மதுகுமாரும் அவரது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரகசியமாகப் பழகி வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அனில்குமார், தன்யாவை அடித்து உதைத்து எச்சரித்தார். இதைத் தொடர்ந்து, தன்யா தனது கணவரின் கொடுமை குறித்து மதுகுமாரிடம் தொலைபேசியில் புலம்பினார். உடனே வீட்டுக்கு வந்த மதுகுமார், அனில்குமாரை அறிவாளால் வெட்ட முயன்றார்.
இதில் அனில்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் அனில்குமாரை காயப்படுத்திவிட்டு மதுகுமார் தப்பியோடினார். இதையடுத்து, அனில்குமாரின் புகாரின் பேரில் ஆறுகாணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதுகுமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் வந்த பிறகும் மதுகுமார் தன்யாவுடனான தொடர்பை நிறுத்தவில்லை. இதனால் மீண்டும் ஆத்திரமடைந்த அனில்குமார், கடைக்கு சென்று தன்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"நம்ம பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தியா?" எனக் கோபமாகக் கேட்டபோது, தன்யாவும் எதிர்த்து பேசவே, ஆவேசத்தில் இரும்பு கம்பியால் தன்யாவை சரமாரியாக அடித்தார். தலையில் பலத்த காயமடைந்த தன்யா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
மனைவி உயிரிழந்துவிட்டதாக நினைத்து பயந்த அனில்குமார், வீட்டுக்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, மளிகைக் கடைக்கு வந்தவர்கள் தன்யாவின் முனகல் சத்தம் கேட்டு, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தன்யாவுக்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.காவல்துறையின் விசாரணையில், இந்தப் பிரச்சனைகளுக்கு மதுகுமாரின் தொடர்பே மூல காரணம் என்பது தெரியவந்துள்ளது.
அவரை மீண்டும் கைது செய்த காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் பத்துகாணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.