இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திடீரென கொட்டும் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று (17) காலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. அப்போது திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது. இதனால் வீதிகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன. டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 1,200 ரூபா கோடி நிவாரணத் தொகையை அளித்துள்ளது. வெள்ள சேதத்தினை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் மேலும் நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபா 50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மழை தொடர்ந்து வரும் நிலையில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மழை நின்ற பிறகே உண்மையான பாதிப்புகள் கணக்கெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.