எதிர்வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 1. இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இடி மின்னல் மழை கிடைக்க தொடங்கும். இன்றும் கூட யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் சராசரியாக 55 மி.மீ. மழை கிடைத்தது. நண்பகலை அண்மித்து அல்லது மாலை அல்லது இரவில் இந்த மழை கிடைக்கும். ஆனால் ஒரே நாளில் அல்லது ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்காது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் எதிர்வரும் 6ம் திகதிக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இந்த இடி மின்னல் மழை கிடைத்துவிடும். 2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் மானாவாரியான மழையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பல வயல்கள் நீரின்றி பாதிப்படைவதாக பலர் கூறியுள்ளனர். அவர்களுக்கு இந்த மழை வரமாக அமையும். 3. இந்த முன்னறிவிப்பின் அடிப்படையில் மழை கிடைக்கும் என நம்பி மழைநீரை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வயல்களுக்கு மருந்து மற்றும் உரமிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மழை கிடைத்ததன் பின்னர் இதனை மேற்கொள்ளலாம். ஏனெனில் எதிர்வரும் 06.11.2025 வரையான மழை இடி மின்னல் மழை என்பதனால் நாள், நேரம் மற்றும் இடத்தினை உறுதிப்படுத்த முடியாது. 4. அதேவேளை இன்றைய தினம்(01.11.2025) மத்திய கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பங்களாதேஷில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5. மீண்டும் எதிர்வரும் 06.11.2025 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கமும் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு கரையை அண்மித்து கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6. மேற்குறித்த இரண்டில் ஏதாவது ஒன்று புயலாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புயலாக மாறினால் அதற்கு 'சென்வார்' என பெயரிடப்படும். 7. வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகி அது எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேரடி செல்வாக்கு செலுத்தினாலே எமக்கு மழை கிடைப்பது உறுதியாகும். அவ்வாறில்லாமல் அது எமக்கு சற்று தொலைவில் நகர்ந்தால் எமது பிரதேச மழைக்கான ஈரப்பதனையும் உள்ளீர்த்து வேறு இடங்களில் கன மழை கிடைக்கும். ஆனால் அதன்பின் சில நாட்களில் எமது பகுதிகளுக்கு மழையற்ற/ மழை மிகக்குறைவான வானிலையே நிகழும்.
