அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (16) மீண்டும் திறக்கப்படுகின்றன.
மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் தென் ஆகிய 6 மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்படுகின்றன.எவ்வாறாயினும் அனர்த்தங்களால் அதிக பாதிப்புக்குள்ளான ஊவா, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, பாடசாலைகள் ஆரம்பிக்கும் காலத்தை இன்று வரை ஒத்திவைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் அடுத்த திங்கட்கிழமை (22) வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், 23 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் டிசம்பர் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலைத் தவணையின் முதல் கட்டம் ஜனவரி மாதம் முதலாம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகளை நடத்துவதற்காக, ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறும்.
அத்துடன், பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காகப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
.jpeg)