அடகு நகைகள் மீட்பு கால நீட்டிப்பு, கடன் மற்றும் லீசிங் தவணைக்கு 6 மாத தாமத சலுகை வழங்க ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் முன்னணி வேண்டுகோள் சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடி நிதியுதவி வழங்கும் நோக்கில், ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் மற்றும் செயலாளர் நாயகம் திரு. திருமேனி யோகநாயகன் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்து, பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்குச் சில முக்கிய சலுகைகளை உடனடியாக வழங்கக் கருணையுடன் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்பதற்கான தற்போதைய 12 மாத கால அவகாசத்தை மேலும் 06 மாதங்கள் நீட்டித்து, மொத்தம் 18 மாதங்களாக அறிவிக்க வேண்டும். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களுக்கான மாதத் தவணைகளைச் செலுத்துவதற்கு 06 மாதங்கள் தாமதிக்க அனுமதிக்க வேண்டும். இந்தத் தாமத காலத்தில் கூடுதல் வட்டி, அபராதம் போன்ற சுமைகள் ஏதும் விதிக்கப்படாமல் இருக்க உத்தரவிட வேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட வாகன லீசிங் தவணைக் கட்டணங்களையும் இதேபோல 06 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த ஒத்திவைப்புக் காலத்தில் எவ்விதமான கட்டண உயர்வும் இன்றி உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான திரு.திருமேனி யோகநாயகன் அவர்கள் தனது அறிக்கையில், இந்த நடவடிக்கைகள் பேரிடர் பாதிப்பில் தத்தளிக்கும் மக்களுக்கு உடனடி நிதி ஆறுதலாக இருக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இவ்விஷயத்தில் ஜனாதிபதி அவர்களின் தீர்மானமும் துரித நடவடிக்கைகளும் நாட்டின் பெரும்பான்மையான குடும்பங்களுக்குப் புதிய நம்பிக்கையையும், வாழ்வாதாரத் தொடர்ச்சியையும் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் முன்னணி, நாட்டு மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குத் தோள் கொடுக்கவும், நிவாரணம் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என்று திடமாக நம்புகிறது.
