💥Breaking | கிளிநொச்சியில் பரபரப்பு: போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து ஓட்டுநர் கைது!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேருந்து (Luxury AC Bus) ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனரா என்பதை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று இரவு முன்னெடுக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது, சொகுசு பேருந்து ஒன்றின் ஓட்டுநர் 'ஐஸ்' (Ice) போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த ஓட்டுநர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதிக பணம் செலுத்தி, பாதுகாப்பான பயணம் அமையும் என்ற நம்பிக்கையில் மக்கள் இவ்வாறான சொகுசு பேருந்துகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பயணிகளின் உயிரைப் பொருட்படுத்தாமல் ஓட்டுநர்கள் இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
"மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள், போதைக்கு அடிமையாகி அவர்களின் உயிரோடு விளையாடுவது கண்டிக்கத்தக்கது."
இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். 🚍🚨
