கொழும்பு - மருதானை பஞ்சிகாவத்தை பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பெண்ணிடம் இருந்து 710 கிராம் 603 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 934 கிராம் 575 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 300 கிராம் 575 மில்லிகிராம் 'ஹேஷ்' போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
300 போதை மாத்திரைகள், ஒரு மின்னணு தராசு, பணம் எண்ணும் இயந்திரம், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக நம்பப்படும் 8,59,730 ரூபாய் பணம் மற்றும் 06 கைப்பேசிகளும் அந்தப் பெண்ணிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று (28) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
