புதிய இணைப்பு
கியூஆர் (QR) முறையை மீறி எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மீது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவற்றின் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்படும் என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கோ தவறாமல் தகவல் அளிக்க வேண்டும் என்றும் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் கிடைப்பதில் ஆபத்து
இதற்கிடையில், கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று உறுதி செய்யப்படும் வரை நாட்டிற்கு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாகவும் டி. ஜே. ராஜகருண மேலும் கூறியுள்ளார்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தவே கியூஆர் (QR) குறியீட்டின் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும்,யாராவது எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை அவதானிக்க இன்று முதல் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது கியூஆர் குறியீடுகளில் மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுவதாகவும், நேற்று இருந்த தொழில்நுட்பச் சிக்கல்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும், கியூஆர் குறியீடுகளை வேறு எங்கும் பயன்படுத்தினால், உடனடியாக அந்த விவரங்களை எரிபொருள் நிறுவனத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இதேவேளை, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த சனிக்கிழமை இரவுடன் முடிவடைந்து, ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும் எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத் தலைவர் டி. ஜெ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கியூஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் எண்ணெய் நுகர்வு 20% குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் டொன்களாகவும், பெட்ரோல் நுகர்வு 4,045 மெட்ரிக் டொன்களாகவும் உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் வரிசைகளை அகற்றும் நோக்கத்தில் கியூஆர் குறியீட்டு முறை நாட்டில் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அடுத்த மாதத்திற்குள் உறுதிசெய்யப்பட்ட எண்ணெய் இருப்பு போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
மத்திய கிழக்கு போர் சூழல் காரணமாக மக்கள் தேவையற்ற முறையில் பீதியடைந்து எரிபொருளைப் பதுக்கி வைத்ததன் விளைவாக திடீரென 'QR ' (தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு) முறையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி ராஜகருண தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலவும் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் ஊடக சந்திப்பில், விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நுகர்வு அதிகரிப்பு
கடந்த சில நாட்களில் எரிபொருள் நுகர்வு சுமார் 20 சதவீதம் திடீரென அதிகரித்தது. இதுவே கியூஆர் (QR) முறையைத் திடீரென அறிமுகப்படுத்தக் காரணம்.
57,000 மெட்ரிக் டொன் டீசலும் 47,000 மெட்ரிக் டொன் பெட்ரோலும் விடுவிக்கப்பட்டன. ஒன்பது நாட்களில், இந்த எரிபொருளின் அளவு இரண்டு கப்பல் சுமைக்குச் சமமாக இருந்தது," என்று விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய அரசியல் சூழலை எதிர்கொண்டு, நாட்டில் ஏற்படக்கூடிய எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்தவும், முறையற்ற எரிபொருள் பதுக்கலைத் தடுக்கவும், இதுபோன்ற காரணங்களுக்காகவே 'கியூஆர்முறையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம்
எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சாதாரண நுகர்வோர் மற்றும் எரிபொருள் கடத்தல்காரர்களின் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டதால், வரிசைகளைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் கியூஆர் (QR) முறையைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
15ஆம் திகதி காலையில் கியூஆர் அமைப்பு மற்றும் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்படுத்தல்கள் காரணமாக சிறிய தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தபோதிலும், அனைத்தும் சரிசெய்யப்பட்டு, அமைப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்து, வரிசைகள் உருவாகியுள்ளன. எனவே இலங்கையில் நிலைமையைச் சமாளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
மேலும், தேவையற்ற பயணங்களைக் குறைத்து, தங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை மட்டும் பெறுவதன் மூலம் இந்த நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
